சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பிரேசிலுக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் அதிகாரத்துவ பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வாவைச் சந்தித்ததுடன் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை மறுஉறுதிப்படுத்திக்கொண்டார்.
பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் அமைந்துள்ள இட்டாமாராட்டி மாளிகையில் அதிபர் லுலாவை டாக்டர் விவியன் நேற்று முன்தினம் சந்தித்ததாக வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற அம்சங்கள் தொடர்பில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வப் பேச்சு நடத்தியதாக அமைச்சு தெரிவித்தது.
வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது.
பிரேசிலிய துணை அதிபரும் மேம்பாட்டு, தொழில்துறை, வர்த்தக அமைச்சருமான ஜெரால்டோ அல்க்மின்னையும் டாக்டர் விவியன் சந்தித்துப் பேசினார்.
இவ்வாண்டு பிற்பாதியில் இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்தாகவுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உருவாகக்கூடிய வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் இருவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
லத்தீன் அமெரிக்காவில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வர்த்தக பங்காளியாக விளங்குகிறது பிரேசில்.
தென்கிழக்காசியாவில் பிரேசிலுக்கு ஆகப் பெரிய வர்த்தக பங்காளியாகவும் ஆசியாவில் மூன்றாவது பெரிய பங்காளியாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது.

