மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தாமான் பத்து மலை பகுதியில் தம் கணவருடன் சிங்கப்பூர் மாது ஒருவர் நடந்து சென்றபோது, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் குறிவைத்து வழிப்பறி செய்ய முயன்றான் திருடன்.
தங்கச் சங்கிலியை அவன் பிடித்து இழுத்தபோது 64 வயதுடைய அந்த மாது, முன்னோக்கி விழுந்துவிட்டார்.
டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில், சம்பவம் முழுமையாகப் பதிவாகியுள்ளது. காலை 10.45 மணியளவில் மாது அவரின் கணவருடன் வாகனம் நிறுத்தும் இடம் ஒன்றில் நடந்து செல்வதாகவும் அவர்களின் பின்னால் மோட்டார்சைக்கிளில் தலைக்கவசம் அணிந்த ஒரு நபர் கவனித்துப் பார்ப்பதாகவும் தெரிகிறது.
அதையடுத்து வண்டியை மெல்ல ஓட்டிச் சென்ற அந்த நபர், தங்கச் சங்கிலியைப் பலவந்தமாக இழுக்க, சிறிது தூரம் அந்த மாது இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் முன்னோக்கி விழுந்தார்.
உடனே, மாதின் கணவர் அவருக்கு உதவினார்.
சம்பவத்தை உறுதிப்படுத்தி மலேசிய காவல்துறை அறிக்கை விடுத்தது.
இருப்பினும் தங்கச் சங்கிலி அறுந்து கீழே விழுந்துவிட்டதாகவும் திருடன் அங்கிருந்து வெறுங்கையோடு சென்றுவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

