பூன் லே ஈரச்சந்தை, உணவு நிலையத்தில் ஆடவர்கள் சிலர் கும்பலாக மலைப்பாம்பு ஒன்றைத் துன்புறுத்தி பின்னர் அதை இறைச்சி வெட்டும் கத்தியால் அடித்துக் கொன்றனர்.
இது குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து ஏக்கர்ஸ் எனப்படும் விலங்கு நலச் சங்கம் இதுபற்றிய மேல்விவரங்கள் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளது.
அது நேற்று தனது ஃபேஸ்புக் பதிவில் இந்தக் காணொளியை பொதுமக்களில் ஒருவர் தனக்கு அனுப்பியதாகத் தெரிவித்தது.
அதில் கும்பலாக சில ஆடவர்கள் இரண்டு மீட்டர் நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை துன்புறுத்து
வதைக் காண முடிகிறது. பின்னர் அதை பொருள்கள் அடுக்கி வைக்கப் பயன்படுத்தும் ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அந்த மலைப்பாம்பை உணவுக் கடைக்கு அருகில் எடுத்துச் சென்று அதை இறைச்சி வெட்டும் கத்தியால் பலமுறை அடித்து கொல்லும் காட்சி அந்த காணொளியில் தெரிகிறது.
இதன் தொடர்பில் அனைத்துத் தகவல்களும் தேசிய பூங்காக் கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக ஏக்கர்ஸ் கூறியது.
இந்தச் சம்பவம் குறித்து பூங்காக் கழகம் விசாரணை நடத்தி வருவதாகவும் ஏக்கர்ஸ் விளக்கியது.
விலங்குகளைத் துன்புறுத்தும் முதல் முறைக் குற்றவாளி
களுக்கு $15,000 அபராதமோ அல்லது 18 மாத சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.