சீனாவிலிருந்து இங்கு கல்வி கற்க வந்த 19 வயது மாது மோசடிக் கும்பலிடம் சிக்கினார். அந்தக் கும்பல் சிங்கப்பூர், சீன அதிகாரிகள் போல் நடித்து அந்த மாதை சீனாவுக்கு திருப்பி அனுப்பப்போவதாக மிரட்டியது.
இம்மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரி எனக் கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து அந்த மாதுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மாது சீனாவின் குவாங்சு மாநிலத்தில் கொவிட்-19 கொள்ளைநோய் தொடர்பாக தவறான தகவல்கள் தந்ததாகக் கூறியது. அத்துடன், அந்த மாது கைப்பேசி செயலி ஒன்றின் மூலம் விசாரணை என்ற பெயரில் தினமும் காணொளி வாயிலாக சீன அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலரிடம் அவர் தொடர்புகொள்ள வைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பிணைத்தொகையாக மாது $200,000 தராவிட்டால் அவர் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்
படுவார் என்றும் மிரட்டப்பட்டார். மாதிடம் பணம் இல்லாததால் அவரை, குற்றவியல் வழக்கு என்ற போர்வையில், தன்னைத் தானே காணொளி எடுத்து அனுப்புமாறும் மோசடிக் கும்பல் கூறியது. மாது அதையும் செய்தார். இதை வைத்து மோசடிக் கும்பல் மாதின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியது. பிணைத் தொகை கேட்டு மிரட்டப்பட்ட மாதின் பெற்றோர் மாதின் ஆசிரியரை தொடர்பு கொண்டனர். ஆசிரியர் காவல்துறையை அணுகி மாதை மீட்க உதவினார்.

