இந்த ஆண்டின் நோன்பு மாதம் அர்த்தமுள்ளதாக அமைந்து இருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு ரமலான் மாதம் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் அதேவேளையில் வலுப்படுத்தும் விதமாகவும் அமைந்து இருப்பதாக அவர் கூறினார்.
அதிபர் நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காணொளியில் அவ்வாறு கூறியுள்ளார்.
உதவி தேவைப்படுவோர் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் முயற்சிகளை முஸ்லிம் சமூகம் அதிகரித்து இருப்பதை அவர் சுட்டினார்.
இஸ்தானாவில் தாம் அளித்த நோன்பு துறப்பு விருந்தில் தம் அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட 'பீ கைண்ட் எஸ்ஜி' தொண்டூழியர்களில் பல்வேறு இனங்களையும் சமயங்களையும் சேர்ந்தோர் இருந்ததாக அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.
இஸ்லாமிய சமயத்தில் விருந்தோம்பல், வெளிப்படைத்தன்மை ஆகியவை போற்றப்படுகின்றன. அதற்கேற்ப மற்ற சமயத்தினரை நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பது சிங்கப்பூரர்களிடையே வழக்கமாக இருப்பது குறித்து தாம் நெகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.
இத்தகைய நடவடிக்கைகள் சமூக ஒருங்கிணைப்பிற்கும் வலுவான பிணைப்பிற்கும் வெவ்வேறு கலாசாரங்கள் குறித்த புரிதலுக்கும் வழிவகுப்பதாக அதிபர் கூறினார்.
"சிங்கப்பூர் முஸ்லிம்கள் இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வேளையில், இயற்கைப் பேரிடர், போர், சர்ச்சைகள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களின் நிலை குறித்து சிந்தித்துப் பார்க்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் நலனுக்காக துஆ செய்வோம்," என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கேட்டுக்கொண்டார்.

