கருத்து வேறுபாடு அரசியலில் வழக்கமான ஒன்று என்றாலும் நாடாளுமன்ற விவாதங்கள் சமூகத்தின் பிணைப்புகளைத் தகர்ப்பவையாக இருக்கக்கூடாது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (படம்) வலியுறுத்தியுள்ளார்.
"நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் செய்யலாம். சூடான பதில்களைப் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் அவை சமூகப் பிணைப்பைப் பாதிக்கும் அளவிற்குத் தொடர்ந்தால் வேற்றுமைக்கும் பிளவுகளுக்கும் அது வித்திடக்கூடும்," என்றார் அவர்.
அதிபர் உரை மீதான விவாதங்களின்போது எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துகளுக்கு நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் பதிலளித்தார்.
சென்ற செவ்வாய்க்கிழமை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மீது இனவாதச் சாயம் பூச அரசாங்கம் முயல்வதாகக் கூறினார்.
சிங்கப்பூரர்களான ஊழியர்களின் கவலைகள் பற்றிக் குரல் கொடுக்கவே தமது கட்சி முயன்றது என்றார் திரு லியோங்.
அதற்குப் பதிலளிக்கையில், "அரசாங்கம் எப்போதும் நாடாளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்களின் அக்கறைகளுக்கு மதிப்பளித்து வந்துள்ளது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களில் அடங்குவர்," என்று அமைச்சர் ஓங் கூறினார்.
"வேலைகள், மாறிவரும் பொருளியலில் போட்டித்தன்மை, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டுப்படியான விலையில் கிடைப்பது போன்றவை குறித்த சிங்கப்பூரர்களின் கவலைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கிறது.
"இத்தகைய விவகாரங்களுக்குத் தீர்வுகாணவும் கொள்கைளில் திருத்தம் செய்யவும் அரசாங்கம் கடுமையாகப் பணியாற்றுகிறது," என்று குறிப்பிட்ட திரு ஓங், சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தைச் சுட்டினார்.
ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளில் ஈடுபட்டவர் என்ற முறையில் அப்போது தாம் சிங்கப்பூரின் குடிநுழைவுக் கொள்கை உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று நாடாளுமன்றத்தில் விளக்கிக் கூறிய பிறகும் அந்த ஆண்டு செப்டம்பரில் திரு லியோங் அந்த ஒப்பந்தம் சிங்கப்பூரர்களிடையே பரவலாக வேலை, வாழ்வாதாரம் தொடர்பில் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தீர்மானம் கொண்டு வந்ததை அமைச்சர் குறிப்பிட்டார்.
"பல்லின சமுதாயமான சிங்கப்பூரின் நல்லிணக்கம், கடின உழைப்பின் பலனாய் கிட்டிய ஒன்று. அதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது," என்றார் அவர்.
நாடாளுமன்றத்தில் புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டால் கட்சிப் பாகுபாடின்றி அவை கருத்தில் கொள்ளப்படுகின்றன என்று கூறிய அமைச்சர் ஓங், பல யோசனைகள் மாறுபட்டவை அல்ல; அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளின் விரிவாக்கமாகவே அவை அமைந்துள்ளன என்றார்.