முன்னாள் வாழ்க்கைத்துணைக்கு பராமரிப்புத் தொகையைத் தர மறுப்போரிடமிருந்து அதனை எளிதில் பெற உதவும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குடும்ப நீதி சீர்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்கீழ், புதிய பராமரிப்பு அமலாக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படும்.
வாழ்க்கைத்துணைக்கு பராமரிப்புத் தொகை தர மறுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கவலைக்குரியனவாக உள்ள நிலையில், அவை தொடர்பில் உறுதியான தீர்வுகாண அந்தக் குழு உதவும்.
சட்ட அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் அவ்வாறு கூறின.
பராமரிப்பு அமலாக்க அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்டவர்களின் சொத்து, வருமான விவரங்களைக் கேட்டுப் பெறும் அதிகாரம் உண்டு.
வங்கிகள், மத்திய சேம நிதிக் கழகம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றிடம் இருந்து அதிகாரிகள் அந்தத் தகவல்களைப் பெற முடியும்.
ஒருவர் உண்மையிலேயே பராமரிப்புத் தொகையைத் தர இயலாதவரா அல்லது வசதி இருந்தும் தர மறுக்கிறாரா என்று முடிவெடுப்பதில் அமலாக்க அதிகாரிகளுக்கு அந்தத் தகவல்கள் உதவும்.
நீதிமன்றம் பொருத்தமான உத்தரவைப் பிறப்பிக்கவும் அவை கைகொடுக்கும் என்பதை அமைச்சுகள் சுட்டின.
உண்மையிலேயே பராமரிப்புத் தொகையைத் தர சிரமப்படுவோர் உரிய நிதி உதவியைப் பெறுவதற்கு அமலாக்கக் குழு அதிகாரிகள் வழிவகுப்பர்.
பராமரிப்புத் தொகையைத் தராமல் ஏய்ப்பதற்காக தங்கள் முன்னாள் வாழ்க்கைத்துணை ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சிலர் கருதக்கூடும்.
எடுத்துக்காட்டாக, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வேறு எங்காவது சேமித்து வைத்திருப்பதாக அவர்கள் நினைக்கக்கூடும். இத்தகைய வழக்குகளில், அதிகாரிகள் பெறும் தகவல்களை ஆதாரங்களாகப் பயன்படுத்த இயலும்.
தற்போது இதற்கான செலவை, புகார் அளிப்பவர்களே ஏற்க வேண்டியுள்ளது.
பெரும்பாலும் நாட்சம்பளம் பெறும் ஊழியர்களாக இருக்கும் அவர்கள் இதன் தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் அன்றைய ஊதியம் கிடைக்காமல் சிரமப்பட நேரிடுகிறது.
பராமரிப்புத் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தியதற்கு ஆதாரம் காட்டும்படி உத்தரவிடவும் மசோதா பரிந்துரைக்கிறது. அவ்வாறு செய்யத் தவறுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.

