குறைந்த வருமான சிங்கப்பூரர்களின் துயரைத் துடைக்க உதவும் வகையில், வேலை நலன் துணை வருமான திட்டத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஆய்வாளர்கள் குழு ஒன்று முன்வைத்து இருக்கிறது.
அந்தத் துணை வருமானத்தை வழங்குவதற்கான வயது வேறுபாட்டை அகற்றிவிட்டு பணவீக்கத்தைக் கருத்தில்கொள்ளலாம் என்று அந்தக் குழு பரிந்துரைத்து இருக்கிறது.
வேலை நலன் துணை வருமானத் திட்டம் 2007ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது. குறைந்த வருமான ஊழியர்களின் வருமானத்தையும் அவர்களுடைய மத்திய சேமநிதிச் சேமிப்பையும் அதிகரிக்க அந்தத் திட்டம் உதவுகிறது.
அந்தத் திட்டத்திற்குத் தகுதிபெறும் வயது இந்த ஆண்டில் இருந்து 35லிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.
வருமான வரம்பு $2,300 லிருந்து $2,500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு நேற்று தனது ஆய்வறிக்கையைப் பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்தது.
அந்த ஆய்வுத் திட்டம் சென்ற ஆண்டில் தொடங்கியது. அதற்கு 'லீப்201' என்ற நன்கொடை நிறுவனம் நிதி வழங்குகிறது.
வேலை நலன் துணை வருமான திட்டம் குறைந்த வருமான ஊழியர்களின் வாழ்க்கைக்கும் ஓய்வுக் காலத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. அதேவேளையில், புற சூழல்கள், குறிப்பாக குறைந்த வருமான மக்களுக்கு, மிகவும் சவால்மிக்கதாக ஆகி இருக்கின்றன என்பதை அறிக்கை சுட்டியது.
மூவரைக் கொண்ட ஆய்வுக் குழு, வேலை நலன் துணை வருமான திட்டத்தை நான்கு வழிகளில் திருத்தி அமைக்க யோசனை தெரிவித்து உள்ளது.
தனிப்பட்ட ஊழியர்களை மட்டுமல்லாது அவர்களின் குடும்பங்களையும் கைதூக்கிவிடுவது; வயதை அடிப்படையாகக்கொண்டு பணம் அளிப்பதில் இடம்பெறக்கூடிய வேறுபாடுகளைக் கட்டம் கட்டமாக அகற்றுவது;
வேலை நலன் துணை வருமானத் திட்டத்தைப் பணவீக்கத்துடன் இணைப்பது; அந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகையில் ரொக்கத்தை அதிகப்படுத்துவது ஆகியவை வல்லுநர்கள் குழு தெரிவித்து இருக்கும் 4 யோசனைகளாகும்.

