சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் சிரமமாகிவிட்டன.
பொருளியல் வளர்ச்சி சரியில்லாமல் மெதுவடைந்ததே அதற்கான காரணம் என்று அறிக்கை ஒன்று தெரிவித்தது.
ஓசிபிசி வங்கி, $30 மில்லியன் வரைப்பட்ட வருடாந்திர விற்றுமுதலைக்கொண்ட ஏறக்குறைய 100,000 உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்து அட்டவணை ஒன்றை உருவாக்கியது.
அதில் ஒட்டுமொத்த அளவாக 49.9 புள்ளிகளை அது கொடுத்து இருக்கிறது. அட்டவணை அளவு 50ஐ தாண்டினால் நிலவரங்கள் மேம்பட்டு இருப்பதாகப் பொருள். 50க்கும் குறைந்தால் அது சென்ற ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நிலவரங்கள் சரியில்லை என்பதைக் காட்டுவதாக இருக்கும்.
அந்த அட்டவணை தொடர்ந்தாற்போல் எட்டு காலாண்டுகளாக 50க்கும் மேற்பட்ட அளவுடனே இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவுற்ற முதல் காலாண்டில் அட்டவணை அளவு 50க்கும் கீழ் குறைந்துவிட்டது.

