புதிய வாழ்க்கையைத் தொடங்கு வதற்காக இந்தோனீசியாவுக்குச் சென்ற சிங்கப்பூரர் ஒருவர், அங்கு அனுமதிக்கப்பட்ட நாள்களுக்கு மேல் தங்கினார்.
வேறு அடையாளங்களைப் பயன்படுத்தி இரண்டு இந்தோனீசிய கடவுச்சீட்டுகளைப் பெற்று அவற்றைக் கொண்டு 2007 முதல் 2016 வரை பல முறை சிங்கப்பூருக்கு வந்து சென்றார்.
அம்ரான் அப்துல் சத்தார், 52, என்ற அந்த ஆடவர் எட்டு குடிநுழைவுக் குற்றங்களை ஒப்புக்கொண்டார். அவருக்கு 22 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அம்ரான் 2004 டிசம்பர் 28ஆம் தேதி சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சிங்கப்பூரைவிட்டு கடைசியாக இந்தோனீசியாவுக்குச் சென்றார். அங்கு அவர் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்க்கத் தொடங்கினார்.
சுமார் இரண்டு மாதம் அந்த நாட்டில் தங்கியிருந்த அவர், தான் அனுமதிக்கப்பட்ட நாள்களுக்கு மேல் சட்டவிரோதமாக தங்கி இருந்ததை உணர்ந்தார்.
நண்பர் உதவியுடன் இந்தோனீசிய அடையாள அட்டையை வாங்கி பாஸ்போர்ட்டுகளைப் பெற்றதாகக் கூறப்பட்டது.

