மதுபானத்தைக் கையாளும் ஒரு நிறுவனத்திற்கு $160,000 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் இயக்குநருக்கு ஆறு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக ஆடம்பர பொருள்களை வடகொரியாவுக்கு அனுப்பியதற்காக அந்தத் தண்டனை கிடைத்தது.
அந்த நிறுவனம், $1.7 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பொருள்களை வடகொரியா வுக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டது.
ஐநா தடைகள் காரணமாக சிங்கப்பூரில் யாராவது வடகொரிய நிறுவனங்களுக்கு ஆடம்பர பொருள்களை விற்றாலோ, அனுப்பினாலோ, மாற்றி அனுப்பினாலோ அந்தக் காரியம் சட்டவிரோதமான ஒன்றாகக் கருதப்படும்.
'ரிஜோ பெவரஜஸ்' என்ற நிறுவனமும் லோ முன் சாங், 43, என்ற அதன் இயக்குநரும் ஏற்கெனவே ஐநா விதிமுறைகள் (தடைகள் வடகொரியா) 2010ன் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது.
குற்றச்செயல்கள் 2016 ஜூலை மாதத்திற்கும் 2018 ஜனவரிக்கும் இடையில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
என்றாலும் லோ அந்த நிறுவனத்தின் ஓர் இயக்குநராக 2019 மே மாதம் தான் பொறுப்பேற்றார்.
குற்றம் நிகழ்ந்தபோது இயக்குநர் பொறுப்பில் இல்லை என்றாலும்கூட லோ, அந்த நிறுவனத்தை இயக்கும் தனி நபராக அப்போது செயல்பட்டார் என்று விசாரணையின்போது குறிப்பிடப்பட்டது.
லோவுக்கு $100,000 பிணை அனுமதிக்கப்பட்டது. அவர் தண்டனையை அனுபவிக்க ஏதுவாக ஜூன் மாதம் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

