செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0606aace-7144-42f1-9065-fe97f64289b9
-

மழை மறைத்த சூரிய கிரகணம்

சிங்கப்பூரில் நேற்றுக் காலை அரிதான சூரிய கிரகணத்தைக் காண சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் கிட்டத்தட்ட 800 பேர் திரண்டனர். ஆனால் மழை காரணமாக மேகம் சூரியனை மறைத்துவிட்டதால் கிரகணத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.

சிங்கப்பூரில் அந்தக் கிரகணம் நேற்று முற்பகல் 10.54 மணிக்கும் பிற்பகல் 12.58 மணிக்கும் இடையில் தெரிய இருந்தது.

பகல் 11.55 மணிக்குக் கிரகணம் உச்சத்தில் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்ததால் கிரகணம் கண்ணுக்குத் தென்படவில்லை.

இருந்தாலும் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட பூரண சூரிய கிரகணத்தை அறிவியல் நிலையத்தில் இருந்தபடி சுமார் 200 பேர் பார்த்தனர்.

அறிவியல் நிலையத்தின் யூடியூப் பக்கத்தில் நேரடியாக இடம்பெற்ற ஒளிபரப்பை 5,000 பேருக்கு மேற்பட்டோர் கண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இசைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடி: காவல்துறை எச்சரிக்கை

சிங்கப்பூரில் போலி இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடிகளில் சிக்கி, கடந்த மார்ச் முதல் குறைந்தது 137 பேர் மொத்தம் சுமார் $170,000 இழந்து இருக்கிறார்கள்.

கேரோசல், சீனாவின் ஸியாவ்ஹோங்ஷு உள்ளிட்ட இணைய வர்த்தகத் தளங்களில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு விளம்பரங்களைப் பார்த்து அப்பாவி மக்கள் பலரும் ஏமாந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.

அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் இருந்து அனுமதிச்சீட்டுகளை வாங்குங்கள் என்று மக்களுக்குக் காவல்துறை ஆலோசனை கூறியது.

இணையத்தில் பொருள்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருந்துகொள்ளும்படி அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

ஆள்மாறாட்ட ஆய்வு மோசடி:

கேஸ் அமைப்பு எச்சரிக்கை

கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் மூலம் ஆய்வு நடத்துவதாகக் கூறி புதிய பாணி ஏமாற்று வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும் என்று கேஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆய்வில் கலந்துகொண்டு விவரங்களைத் தெரிவித்தால் $13 வெகுமதி கொடுக்கப்படும் என்று மோசடிக்காரர்கள் சொல்கிறார்கள்.

வெளிநாட்டுத் தொலைபேசி எண்கள் மூலமாக குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இந்த விவகாரம் பற்றி காவல்துறையிடம் கேஸ் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

யாருக்காவது அதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால் அது பற்றி 9795-8397 என்ற எண் மூலம் தன்னிடம் தெரியப்படுத்தலாம் என்று கேஸ் கேட்டுக்கொண்டுள்ளது.