பொத்தோங் பாசிரில் பாதுகாவல் அதிகாரிமீது தாக்குதல்

1 mins read
cde36477-5a5a-41fb-bd70-45d51f256729
'யுஎஸ்இ'யின் சமரசச் சேவைகளுக்கான மேற்பார்வையாளர் முருகேசன் முத்துசாமி (இடமிருந்து முதல் நபர்), பொதுச் செயலாளர் ரெய்மண்ட் சின் (இடமிருந்து இரண்டாவது நபர்) இருவரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியன்று காயமுற்ற பாதுகாவல் அதிகாரியைச் (வலமிருந்து இரண்டாவது நபர்) சந்தித்து உதவி வழங்கினர். படம்: பாதுகாவல் அதிகாரிகள் ஊழியரணி (யுஎஸ்இ), ஃபேஸ்புக் -

பொத்தோங் பாசிரில் உள்ள கூட்டுரிமை வீட்டுப் பாதுகாவல் அதிகாரி ஒருவரை அங்கு வசிக்கும் ஆடவர் பலமுறை தாக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 உட்ஸ்வில் குளோஸ் கூட்டுரிமை வீட்டுக் கட்டட வளாகத்தில் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த விவரங்களை 'யூஎஸ்இ' எனப்படும் பாதுகாவல் அதிகாரிகள் ஊழியரணி ஃபேஸ்புக்கில் வெளியிட்டது.

தாக்கப்பட்ட 73 வயது பாதுகாவல் அதிகாரியின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.

காயமுற்றதுடன் அவருக்கு ரத்தக் கசிவும் ஏற்பட்டிருக்கிறது.

அவர் தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.

ஏப்ரல் மாதம் மட்டும் இது உட்பட பாதுகாவல் அதிகாரிகள் தாக்கப்பட்ட மூன்று சம்பவங்கள் 'யூஎஸ்இ'யின் கவனத்துக்கு வந்திருக்கிறது.

பாதுகாவல் அதிகாரிக்கு வேண்டுமென்றே தொந்தரவு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை, 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

பாதுகாவல் அதிகாரியைத் தாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஈராண்டு சிறைத் தண்டனை அல்லது 7,500 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஒருவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றம் நிரூபணமானால் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.