இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியன்று குடிநுழைவு சோதனை முறையில் இடையூறு நேர்ந்தபோது மொத்தம் 85,000 பயணிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், நிலம், ஆகாயம்வழி பயணம் செய்யத் திட்டமிட்டவர்கள்.
விமானப் பயணிகளில் 30,000 பேர் பாதிக்கப்பட்டனர்; அவர்களில் 21 பேர் தாங்கள் செல்லவேண்டிய விமானத்தில் ஏறமுடியாமல் போனது.
உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இடங்களில் இருக்கும் நிலத்தில் பயணம் செய்வோருக்கான குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் 55,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
குடிநுழைவு சோதனை முறையை மேம்படுத்தும்போது ஏற்பட்ட இடையூறால் இந்நிலை உருவானதெனத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சோதனை முறை மேம்படுத்தப்பட்டதைக் கையாள்வது குறித்து சிங்கப்பூர் குடிநுழைவு, சாவடி ஆணையம் மறுபரிசீலனை செய்து வருவதாக உள்துறை துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் வெள்ளிக்கிழமையன்று (21 ஏப்ரல்) நாடாளுமன்றத்தில் கூறினார்.

