குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தால், குடிநுழைவு அனுமதி முறையில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளின்போது மார்ச் 31ஆம் தேதியன்று நிகழ்ந்த இடையூறால் மொத்தம் தரைவழி, வான்வழி 85,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 113 புறப்பாட்டு, 111 வருகை விமானப் பயணங்களில் 30,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். 21 பயணிகள் தங்கள் விமானப் பயணங்களைத் தவறவிட்டனர்.
மேலும், உட்லண்ட்ஸ், துவாஸ் தரைவழி சோதனைச் சாவடிகள் வழியாகச் சென்ற 55,000 பயணிகளும் இந்த இடையூறால் பாதிக்கப்பட்டனர் என்று நேற்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
இச்சம்பவத்துக்குப் பிறகு குடிநுழைவு அனுமதி மேம்பாட்டுப் பணி மறுஆய்வு செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், குடிநுழைவு அனுமதி முறை மேம்பாட்டுப் பணிகள், பன்முறை உடலுறுப்பு அடையாள முறையின் சிறந்த செயலாக்கத்துக்குத் தேவைப்படுகிறது. அவ்வாறு சோதனை மேற்கொள்ளப்படும்போது, அன்று காலை 10.40 மணிக்கு, தரவு சேமிப்பு முறையில் அதிக சுமை ஏற்றப்பட்டதால் இடையூறு ஏற்பட்டது. உடனடியாக சோதனை முறை நிறுத்தப்பட்டது.
இதுபோன்ற தடை ஏற்படுமாயின், 30 நிமிடங்களுக்குள் அதை சரிசெய்ய குத்தகைதாரர்கள் தயார்நிலையில் இருப்பார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக அந்தத் தடை நாலரை மணிநேரத்துக்கு நீடித்தது என்றார் இணைப் பேராசிரியர் ஃபைஷல்.
தானியங்கி குடிநுழைவு முறையில் தடை ஏற்பட்டவுடன், ஆணையம் உடனடியாக பணியில் இல்லாத அதிகாரிகளை உடனே வேலைக்கு அழைத்து, குடிநுழைவு முகப்புகளில் நிறுத்தியது.
இருப்பினும், எல்லா முகப்புகளிலும் தடை ஏற்படவில்லை. காரணம், வெவ்வேறு மாதிரி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர்.
விமானத்தைத் தவறவிட்ட 21 பயணிகள் ஒரு வாரத்துக்குள் மாற்று பயணத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

