கேலாங் சிராய் ரமலான் சந்தைகளில் உள்ள பல கடைக்காரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். மக்கள் கழகம் ஏற்பாடு செய்த முந்தைய ஆண்டு சந்தைகள் அல்லது பிற வர்த்தக கண்காட்சிகளில் கடைகளை நடத்தி உள்ளனர் என்று மக்கள் கழகத் துணைத் தலைவர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு கடையை ஏலக்குத்தகைக்கு எடுப்பதற்கு முன், ஏலச் செயல்பாட்டின்போது, நடத்துநர்களால் வெளியிடப்பட்ட வாடகை விவரங்களைக் கடைக்காரர்கள் அறிந்திருப்பார்கள்.
வர்த்தக கண்காட்சிகள், சந்தைகளின் ஸ்டால் கடைகள், கடைக்காரர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வாடகையில் இருப்பதை எவ்வாறு மக்கள் கழகம் உறுதிசெய்கிறது என்ற அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஃபைசல் மனாப்பின் கேள்விக்குப் பதிலளித்தபோது கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சருமான திரு டோங் இதனைக் கூறினார்.
$24,000வரை வாடகை உயர்ந்திருப்பதாக கடைக்காரர்கள் புகார் அளித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் கடைக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை அறிந்திருப்பர். நடத்துநர்கள் வெளிப்படையான ஏலச் செயல்முறை மூலம் இந்த ஏலக்குத்தகையை வென்றனர். இது சந்தை விலையைப் பிரதி பலிக்கிறது என்று திரு டோங் கூறினார்.
ஸ்டால் கடையை ஏலம் எடுக்க விரும்புவோர், வர்த்தக கண்காட்சி அல்லது சந்தை எந்தெந்த இடங்களில் நடத்தப்படுகிறது என்பது குறித்தும் முன்கூட்டியே தெரிந்திருப்பர்.
சந்தையை நிர்வகிக்கவும் நடத்தவும் சிறந்த நிபுணத்துவம், அனுபவம், பரிந்துரைகளுடன் கொண்டிருக்கும் குத்தகைதாரரைப் பெறுவதே முக்கியமானது. அதிகமான தொகையை நிர்ணயித்தவருக்கே குத்தகை கிடைக்கும் என்பதில்லை.
இந்த ஆண்டு, எஸ்-லைட் இவெண்ட் சப்போர்ட், டிஎல்கே டிரேட் ஃபேர் அண்ட் இவெண்ட்ஸ், என்னிச் குளோபல் டிரேடிங் ஆகியவை இணைந்த கூட்டமைப்பிற்கு ஏலக்குத்தகை வழங்கப்பட்டது. இது அதிகமான தொகையை நிர்ணயித்த அமைப்பல்ல என்று திரு டோங் கூறினார்.
மக்கள் கழகத்தின் தலைமையில் கேலாங் சிராயின் சமூக, கலாசார பாரம்பரிய மையமான விஸ்மா கேலாங் சிராய் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது என்றார் அவர்.

