டைம்சோன் என்ற பொழுது போக்கு நிறுவனத்தொகுதி தனது ஆகப்பெரிய பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தை ஆர்ச்சர்ட் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் திறந்து இருக்கிறது.
அந்தக் கட்டடத்தின் பாதாள அறை கடைத்தொகுதியில் சுமார் 22,000 சதுர அடி பரப்பளவு உள்ள சில்லறை வர்த்தக இடத்தில் புதிய பொழுதுபோக்கு மையம் திறக்கப்பட்டுள்ளது.
அதில் சுமார் 160 வகையான விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்களில் பொதுமக்கள் ஈடுபடலாம். மின் கார்களை ஓட்டி விளையாடுவது, மெய்நிகர் விளையாட்டுகள், உருட்டுப் பந்து இடம் உள்ளிட்ட பலவும் அவற்றில் அடங்கும்.
ஆர்ச்சர்ட் ரோடு கடைத்தொகுதி வட்டாரத்திற்குப் புத்துயிர் அளித்து குடும்பங்களைக் கவர்வதற்கான ஆகப் புதிய தொழில்நுட்ப திட்டங்கள் இடம்பெறுவதை அந்தப் பொழுதுபோக்கு மையம் எடுத்துக் காட்டுகிறது.
டைம்சோன் நிறுவனம் அந்த இடத்தை ஐந்து ஆண்டுகாலத்திற்கு வாடகைக்கு எடுத்து அதில் $6 மில்லியன் முதலீடு செய்துள்ளது. சிங்கப்பூரில் இதுவே அந்த நிறுவனத்தின் ஆகப் பெரிய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.

