மோனலிசா
அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் அந்த ஆண்டுதோறும் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. கொவிட்-19 கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்ந்துள்ள நிலையில் இவ்வாண்டின் அட்சய திரிதியையை மக்கள் வழக்க நிலையில் வரவேற்று மகிழ்ந்தனர்.
அவ்வகையில் இவ்வாண்டின் லிட்டில் இந்தியாவில் உள்ள தங்க நகைக் கடைகள் நேற்றும் நேற்று முன்தினமும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தன.
'சூன் ஹூவாட்' நகைக் கடையில் நிற்பதற்குக்கூட இடம் இல்லாத அளவிற்கு வெளிநாட்டு ஊழியர்கள் நெடுநேரம் காத்திருந்து வரிசையில் நின்று தங்கம் வாங்கிச் சென்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத்துறையில் சாயம் பூசுபவராகப் பணிபுரியும் ஜெகதீசன் மாரிமுத்து, 49, "முதன்முதலில் நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்திருந்தபோது என் நண்பர் இக்கடையை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு முறை குடும்பத்தினருக்கு இங்கு வாங்கும்போதும் நியாயமான விலையிலேயே வாங்கியுள்ளேன்," என்று கூறினார்.
இதேபோல் ஏழு ஆண்டுகளாக கட்டுமானத் துறையில் பத்திரித் தொழிலாளராகப் பணிபுரியும் பாலமுருகன் ஜெயராமன், 33, "இந்தக் கடையில் வேலைபார்ப்பவர்கள் சீனர்களாக இருந்தாலும்கூட, எளிய ஆங்கிலத்தில் பேசி, எங்களுக்குப் புரிய வைப்பார்கள்," என்று கூறினார்.
இதேபோல் லிட்டில் இந்தியா பகுதியின் மற்ற நகைக் கடைகளிலும் மக்கள் நிறைந்திருந்தனர்.
இது குறித்து அணிமணி பொற்சாலை நகைக்கடையின் இயக்குநர் சுப்பையா ராமு, 58, "இவ்வாண்டு, கடந்த ஆண்டுகளைவிட அதிக மக்கள் நேரில் வந்து நகை வாங்கிச் சென்றனர். மக்களை கவரும் வண்ணம் குறைந்த செய்கூலி சேதாரமும் பரிசுகளும் வழங்கினோம்," என்று கூறினார்.
"இந்த ஆண்டின் அட்சய திரிதியை இரண்டு நாள்கள் நீடித்ததால், குறிப்பாக பொது விடுமுறையின்போது வந்ததால் அதிக மக்கள் நேரடியாகக் கடைக்கு வந்து நகை வாங்க ஏதுவாக இருந்தது.
"புதிதாக நகை வாங்குவோரின் எண்ணிக்கை வழக்கத்தைக் காட்டிலும் சற்றுக் குறைவாக இருந்தது. தங்கவிலை உயர்வும் ஜிஎஸ்டி உயர்வும் இதற்குக் காரணமாக இருக்கலாம்," என்று கூறினார் அபிராமி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிதி இயக்குநர் ராஜலட்சுமி கண்ணப்பன், 34.
"ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில் நகைகள் வாங்குவது மனநிறைவை அளிக்கிறது. பல ஆண்டுகளாக எங்கள் குடும்பம் இதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளோம்," என்றார் தனியார் உணவகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் சரஸ்வதி அங்கனாதி, 55.

