சிங்கப்பூர் பொதுநல மருந்தகங்களில் சளிக்காய்ச்சல் தடுப்பூசிகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது

சிங்கப்பூர் பொதுநல மருந்தகங்களில் சளிக்காய்ச்சல் தடுப்பூசிகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது

3 mins read
68b6ebaf-0cbd-4a33-8944-48afee8f229c
-

கொவிட்-19 பெருந்­தொற்று காலத்­தில் மக்­கள் சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொள்­வ­தில் காட்­டிய ஆர்­வம் பெருந்­தொற்று காலத்­துக்­குப் பிற­கும் நீடிப்­ப­தாக சில மருத்­த­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

"சிங்­கப்­பூ­ரில் எங்­கள் குழு­மத்­தின் சுமார் 30 பொது­நல மருந்­த­கங்­களில் 2022ல் சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொண்­டோ­ரின் எண்­ணிக்கை 2021ல் போட்­டுக்­கொண்­டோ­ரின் எண்­ணிக்­கை­யை­விட இரட்­டிப்­பானது," என்று பார்க்வே ஷென்­டன் குழு­மத்­தின் மருத்­துவ இயக்­கு­நர் டாக்­டர் எட்­வின் சிங்.

"கடந்த ஆண்டு சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொண்­டோ­ரின் எண்­ணிக்கை முந்­தைய ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் 20லிருந்து 30% வரை அதி­க­ரித்­தது," என்று நார்த்­ஈஸ்ட் மருத்­து­வக் குழு­மத்­தின் பொது­நல மருத்­து­வர் டாக்­டர் லிம் லீ வெய் கூறி­னார்.

அதே கால­கட்­டத்­தில் தங்­கள் மருந்­த­கங்­க­ளி­லும் சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொண்­டோ­ரின் எண்­ணிக்கை முந்­தைய ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் 20லிருந்து 30% வரை அதி­க­ரித்­தது என்று தீவு முழு­வதும் 50க்கு மேற்­பட்ட மருந்­த­கங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் ராஃபிள்ஸ் மருத்துவக் குழு­மம் தெரி­வித்­தது.

2020ல் கொவிட்-19 பெருந்­தொற்று உச்­சத்­தில் இருந்­த­போது, கடு­மை­யான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்து, தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை குறை­வாக இருந்­த­போ­தும் சளிக்­காய்ச்­சல் தடுப்பூசிக்­கான தேவை அதி­க­ரித்­தது.

கடந்த 12 மாதங்­களில் 18 முதல் 74 வயது வரை­யி­லான மக்­களில் 18.7 விழுக்­காட்­டி­னர் சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொண்­ட­தாக கடந்த டிசம்­ப­ரில் வெளி­யி­டப்­பட்ட சுகா­தார அமைச்­சின் தேசிய மக்­கள்­தொகை சுகா­தார ஆய்வு 2021 மூலம் தெரியவந்­தது.

ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­படும் இந்த ஆய்வு, 2020 ஜூலை முதல் 2021 ஜூன் வரை, 8,000க்கு மேற்­பட்­டோ­ரின் சுகா­தார, அபா­யக் கூறு­க­ளை­யும் வாழ்க்­கை­பாணி பழக்­கங்­க­ளை­யும் கண்­கா­ணித்­தது.

மேலும், 65 முதல் 74 வயது வரை­யுள்ள குடி­யி­ருப்­பா­ளர்­களில் சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் 2019ல் 24.2 விழுக்­காட்­டி­லி­ருந்து 2021ல் 32.4 விழுக்­காட்­டுக்கு உயர்ந்­தது என்று கண்­ட­றியப்­பட்­டது.

"எல்லா வய­துப் பிரி­வி­லும் குறிப்­பாக 65 வயது அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­தி­ன­ரி­டையே சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் அதி­க­ரித்­தது," என்­றார் ராஃபிள்ஸ் மருத்­து­வக் குழு­மத்­தின் குடும்­ப­நல மருத்­து­வர் டாக்­டர் மைக்­கல் வோங்.

கொவிட்-19 பெருந்­தொற்று காலத்­தில் தடுப்­பூ­சி­யின் முக்­கி­யத்­து­வம் அதிக அள­வில் வலி­யு­றுத்­தப்­பட்­ட­தால், இந்த எண்­ணிக்கை உயர்ந்திருக்கலாம் என்று சுகா­தார அமைச்சு சொன்­னது.

சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு அர­சாங்­கம் வழங்­கிய தாரா­ள­மான மானி­யங்­களும் இதற்கு ஒரு கார­ண­மாக அமைந்­தி­ருக்­க­லாம் என்­றார் டாக்­டர் லிம்.

பெரி­ய­வர்­க­ளுக்­கான தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தில், 65 வயது அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டைய சிங்­கப்­பூர் குடி­மக்­கள் சமூக சுகா­தார உத­வித் திட்­டத்­தில் பங்­கு­கொள்­ளும் பொது­நல மருந்­த­கங்­களில் கட்­ட­ணக் கழி­வுடன் சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொள்­ள­லாம். கடந்த ஆண்டு நவம்­பர் முதல் மக்­கள் சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொள்ள, அர­சாங்­கத்­தின் சுகா­தா­ரத் திட்­டத்­தில் உள்ள 580க்கு மேற்­பட்ட பொது­நல மருந்­த­கங்­களில் தேதியைப் பதிந்­து­கொள்­ள­லாம்.

சுகா­தார அமைச்­சின் பல­துறை மருந்­த­கங்­க­ளுக்குச் சென்­றோர் தரவை வைத்­துப் பார்க்­கும்­போது, 2023ல் சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை ஜன­வ­ரி­யில் 96 என்று இருந்து, மார்ச்­சில் 421 ஆக அதி­க­ரித்­தது என தெரியவந்­தது.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­தல் சளிக்­காய்ச்­சல் ஏற்­படும் அபா­யத்­தை­யும் நோய்­வாய்ப்­ப­டும்­போது தொற்­றின் கடு­மை­யை­யும் குறைக்­கிறது. மேலும் அது மார­டைப்பு, பக்­க­வாத அபா­யம் ஆகியவை ஏற்படும் ஆபத்தையும் குறைக்­கும். அத்துடன், சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொள்­ளும் கரிப்­பி­ணிப் பெண்­கள், தங்­களைப் பாது­காத்­துக்­கொள்­வ­து­டன் குழந்தைக்கும் சில மாதங்­க­ளுக்கு சளிக்­காய்ச்­சல் ஏற்­ப­டு­வதில் இருந்தும் தடுக்­கிறது," என்று டாக்­டர் சிங் விவ­ரித்­தார்.

சளிக்­காய்ச்­ச­லுக்கு தடுப்பூசி போட்­டுக்­கொள்­வ­தன் முக்­கி­யத்­து­வம் பற்றி இன்­னும் அதி­க­மான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று டாக்­டர் வோங் கருத்­து­ரைத்­தார்.