டன்யர்ன் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 64 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஒரு வாகனம், பாதசாரி சம்பந்தப்பட்ட இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமையன்று (23 ஏப்ரல்) டான் கா கீ பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு அருகே நிகழ்ந்தது.
வாட்டன் எஸ்டேட் சாலை சந்திப்புக்கு அருகே விபத்து நேர்ந்ததாக பிற்பகல் இரண்டு மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விபத்துக்கு ஆளான பாதசாரி சம்பவ இடத்திலேயே மாண்டதாக குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான வாகனத்தின் 44 வயது ஓட்டுநர் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்ததன் தொடர்பில் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாகனத்தில் இருந்த நான்கு வயது சிறுவனும் மூன்று வயது சிறுமியும் சிகிச்சைக்காக கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

