மலேசியரான 36 வயது கோபீஸ்வரன் பரமன் சிவன் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் 26 நாய்களையும் ஒரு பூனையையும் தனது லாரியில் சிங்கப்பூருக்குக் கடத்தி வந்தார்.
அவற்றில் 19 விலங்குகள் உயிரிழந்ததாக தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது. விலங்கு கடத்தல் தொடர்பில் சுமத்தப்பட்ட 20 குற்றச்சாட்டுகளை கோபீஸ்வரன் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு நேற்று ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்கு கட்டுமானப் பொருள்களை ஏற்றிவரும் லாரியின் ஓட்டுநராகப் பணிபுரிந்த கோபீஸ்வரனை 'டிடோ' என்பவர் விலங்குகளைக் கடத்தும்படி 2021ல் அணுகினார்.
உயிருடன் கொண்டுவரப்படும் ஒவ்வொரு விலங்குக்கும் 75 வெள்ளி தரப்படும் என்றும் ஒருவேளை விலங்குகள் இறந்தால் அவற்றுக்குத் தொகை தரப்படாது என்றும் கூறப்பட்டது.
அதற்கு ஒப்புக்கொண்டு அப்போது முதல் நாய்கள், பூனைகள், கிளிகளை மாதத்தில் இரண்டு, மூன்றுமுறை கடத்தியதாக கோபீஸ்வரன் கூறினார்.
பெட்டிகள், அழுக்குத் துணிகளுக்கானப் பைகளில் வைத்து மூடி பின்னர் இருக்கைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விலங்குகள் கடத்தப்பட்டன.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி 26 நாய்களுடன் ஒரு பூனையைக் கடத்தி வந்தபோது துவாஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் கோபீஸ்வரனின் லாரியைச் சோதனையிட்டனர்.
அப்போது நாய்க் குட்டி ஒன்று பெட்டியில் இருந்து தப்பி லாரிக்குள் இருந்ததை அதிகாரி ஒருவர் கண்டார்.
பெரிய நாய் ஒன்று இறந்து கிடந்ததையும் அவர் கண்டுபிடித்தார்.
மேலும் 18 நாய்கள் பின்னர் தொற்றுநோய் பாதிப்பால் மாண்டன.