சைனாடவுன் நகைக் கடையில் இரண்டு தங்கச் சங்கிலிகளைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தங்கச் சங்கிலிகளின் மதிப்பு 23,000 வெள்ளி.
ஞாயிற்றுக்கிமையன்று (23 ஏப்ரல்) நிகழ்ந்த சம்பவத்தில் கடைக்காரர் திரும்பிய சில நொடிகளில் சிறுவன் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடியதாகக் கூறப்படுகிறது.
ஞாயிறு மாலை 5.30 மணியளவில் முகக்கவசம் அணிந்து வந்த சிறுவன், சைனாடவுனில் உள்ள சுங் ஹுவா ஜேட் அண்ட் ஜூவல்லரி நகைக் கடைக்குச் சென்று தங்கச் சங்கிலிகளை காட்டுமாறு கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
அப்போது தனது சகோதரருடன் சேர்ந்து குடும்ப நகைக் கடையை நடத்தும் 45 வயது திரு டெங் வெய் சியோங், சிறுவனுக்கு இரண்டு தங்கச் சங்கிலியைத் தான் காட்டியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
ஆனால் கனமான சங்கிலியைக் காட்டுமாறு சிறுவன் கேட்டதாக அவர் கூறினார்.
இதனால் கனமான இரண்டு தங்கச்சங்கிலிகளை சிறுவனுக்கு அவர் காட்டினார்.
பின்னர், முதலில் காட்டிய இரண்டு தங்கச் சங்கிலிகளை மீண்டும் பெட்டகத்தில் வைக்க திரு டெங் திரும்பிய சில நொடிகளில் சிறுவன் இரண்டு தங்கச் சங்கிலிகளை எடுத்துக் கொண்டு ஓடியது போல் தெரிந்த காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
திரு டெங்கும் அவரது சகோதரரான 39 வயது டெங் வெய் ஸின்னும் சிறுவனை துரத்திச் சென்று ஓடி ஒருவழியாக மடக்கிப் பிடித்தனர்.
சிறுவனை கடைக்கு அழைத்து வந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பார்க் ரோடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சிறுவனை அதே நாளில் கைதுசெய்தனர்.

