இரவில் பொது இடங்களில் தூங்குவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 40% குறைந்து 530 பேர் ஆனது. இது 2019ல் 921 பேராக இருந்தது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது.
குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது உடன் தங்கியிருப்போருடன் வாக்குவாதம், நிரந்த வீடு இல்லாமை அல்லது வீட்டின் செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமை, நிதிப் பிரச்சினைகள் முதலியவை இரவில் பொது இடங்களில் தூங்குவதற்குரிய காரணங்கள் என்று கூறிய அமைச்சு, ஓர் இரவில் எங்கெல்லாம் மக்கள் பொது இடங்களில் தூங்குகிறார்கள் என்று கணக்கெடுத்து, அதனை வைத்து கடந்த ஆண்டு நவம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
பொது இடங்களில் தூங்குவோருக்கு உதவி வழங்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள வேளையில், ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் பாதிப் பேர் தாங்கள் சமூக அளவிலோ அரசாங்கத்திடமிருந்தோ எந்த உதவியையும் நாடவில்லை என்றனர்.
பொது இடங்களில் தூங்குவோரில் பெரும்பாலோர் நடுத்தர வயதுடையவர்களாகவும் முதிய சீனர்களாகவும் உள்ளனர். அந்த விவரம் 2019, 2021ஆம் ஆண்டுகளில் லீ குவான் இயூ பொதுக் கொள்கை பள்ளி நடத்திய முன்னைய ஆய்வுகளுடன் ஒத்திருந்தது.
2019ஆம் ஆண்டு ஆய்வின்படி, 921 பேர் தீவு முழுதும் உள்ள பொது இடங்களில் தூங்கினர். 2021ஆம் ஆண்டு ஆய்வின்படி, 616 பேர் அவ்வாறு பொது இடங்களில் தூங்கினர்.
ஆகக் கடைசியாக நடத்தப்பட்ட ஆய்வில், இரவில் பொது இடங்களில் தூங்குவோரில் கிட்டத்தட்ட பாதிப் பேரை வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள், வெற்றுத் தளங்கள், படிக்கட்டுகள், விளையாட்டு இடங்கள், உடற்பயிற்சிக் கூடங்களில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் கால்வாசிப் பேர் பூங்காக்களிலும் அமரும் இடங்களிலும் காணப்பட்டனர். 12 விழுக்காட்டினர் கடைத்தொகுதிகள் போன்ற வணிக வளாகங் களிலும் 11 விழுக்காட்டினர் உணவு நிலையங்கள், சந்தைகள் ஆகியவற்றிலும் காணப்பட்டனர்.
பெரும்பாலானவர்கள் கூரையுடன் கூடிய இடங்களிலும் நல்ல வெளிச்சம் உள்ள இடங்களிலும் தூங்கினர். அவர்கள் விருப்பப்பட்டே வெளிச்சமான இடங்களையும் வசதிகள் உள்ள இடங்களையும் தேர்வு செய்கிறார்கள்.
முன்னைய ஆய்வுகளின்படி, இரவில் பொது இடங்களில் தூங்குவோர் பெரிய, பழைய அக்கம்பக்கங்களில் காணப்பட்டாலும் 2022 ஆய்வுகளின்படி அந்த பாணி மாறியிருந்தது.
காலாங், கேலாங், புக்கிட் மேரா, தென்தீவுகள், தெம்பனிஸ் ஆகியவையே ஆக அதிகமாக இரவில் பொது இடங்களில் தூங்குவோரை ஈர்த்துள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட பொது இடங்களில் தூங்குவோரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பயிற்சி பெற்ற 860 தொண்டூழியர்கள் ஈடுபட்டனர். அவர்களில் 'பியர்ஸ்' எனப்படும் இரவில் பொது இடங்களில் தூங்குவோரைக் கண்டுபிடித்து ஆதரவளிக்கும் கட்டமைப்பு, சமூகப் பங்காளிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரும் அடங்குவர்.
'பியர்ஸ்' கட்டமைப்பில் சமூக குழுக்கள், சமூக சேவை அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

