சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கடந்த சனிக்கிழமை கியூபாவின் அதிபர் மிகுவல் டியாஸ்-கனெலைச் சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நட்பார்ந்த, நீண்டகால உறவை மறுவுறுத்திப்படுத்திக் கொண்டனர்.
சந்திப்பின்போது இருவரும் வட்டார நிலவரங்கள் பற்றி பேசியதோடு, துறைமுகங்கள், சுற்றுலாத் துறை, வான்வெளிச் சேவைகள், உயிர்தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது பற்றி விவாதித்தனர் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கியூபாவுக்கு நான்கு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டிருந்த டாக்டர் விவியன், அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளிநாட்டு வர்த்தக, வெளிநாட்டு முதலீட்டு துறைகளின் அமைச்சருமான ரிக்கார்டோ கபிரிசஸ் ருயிசையும் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தார். அதே நாளன்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிகெஸ் பரில்லா அமைச்சர் விவியனுக்குப் பகல் விருந்தளித்தார்.
இரு வெளியுறவு அமைச்சர்களும் சவால்மிக்க வெளிப்புற சுற்றுச்சூழலுக்கு இடையே தங்கள் உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி பேசினர்.
ஐக்கிய நாடுகள் சபையில், குறிப்பாக, 134 வளரும் நாடுகள் குழுமமான 77G அமைப்புக்கு இரு நாடுகளுக்கிடையே இருக்கும் வலுவான ஒத்துழைப்பை வரவேற்றனர். 77G அமைப்புக்கு கியூபா தலைமை வகிக்கிறது.
டாக்டர் விவியன், கடந்த வியாழக்கிழமை கியூபாவின் பொருளியல், திட்டமிடல் அமைச்சர் அலெக்ஹன்ட்ரோ ஹில் ஃபெர்னான்டெசை சந்தித்தார்.
டாக்டர் விவியன் நேற்று முன்தினம் நாடு திரும்பினார்.

