சிங்கப்பூர் உணவு அமைப்பின் அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது 43 உணவுக் கடைகளுக்கு எழுத்துபூர்வமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடைகளின் ஊழியர்கள் உணவு தயாரிக்கும்போது முகக்கவசமோ எச்சில் படாமல் தடுப்பதற்குரிய கவசத்தையோ அணியாமல் வேலை செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சென்ற மாதம் 29ஆம் தேதிக்கும் இம்மாதம் 14ஆம் தேதிக்கும் இடையில் அந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 451 கடைகள் சோதனையிடப்பட்டதாகவும் அவற்றில் பெரும்பாலானவற்றில் முகக்கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
விதிமீறல் கண்டறியப்பட்ட 43 கடைகளின் உரிமையாளர்களுக்கு இது முதல்முறை என்பதால் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டிருப்பதாகவும் மீண்டும் விதிமீறல் குறித்துத் தெரியவந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
உரிமம் தொடர்பான விதிகள் மீறப்பட்டால் உணவுக்கடை உரிமையாளர்களுக்கு $10,000 வரையிலான அபராதத்துடன் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும் அவர்களது உரிமங்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படக்கூடும்.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து உணவுக் கடைகளில் உணவைக் கையாள்வோர் முகக்கவசம் அல்லது வேறு ஏதாவது தடுப்புகளை அணிவது கட்டாயம்.
தும்மினாலோ இருமினாலோ உணவுகள் மீது எச்சில் படாமல் பாதுகாப்பது அதன் நோக்கம்.
உணவகங்கள், இரவு நேரக் கேளிக்கை விடுதிகள், வீதியோர உணவுக்கடைகள், காப்பிக் கடைகள், தற்காலிக உணவுக்கூடங்கள் போன்றவற்றிற்கும் இது பொருந்தும்.

