தொழில்நுட்பத் தேவைகளை ஈடுகட்டுதல் குறித்து அமைச்சு
தொழில்நுட்பம் இன்று பெரும்பாலும் கணினி விளையாட்டுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் வருங்காலத்தில் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இணையவழிப் பயிற்சிக்கு அது புதிய கதவுகளைத் திறக்கக்கூடும் என்று தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரின் மின்னிலக்க உள்கட்டமைப்பு குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.
மிகைமெய் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தானியக்க வாகனங்கள் உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் சிங்கப்பூரின் தொழில் நுட்பத் துறைத் தேவைகளை ஈடுகட்ட மிகவும் முக்கியம். அத்துடன் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளவும் அது மிக அவசியம் என்று அமைச்சு தெரிவித்தது.
இந்தத் துறைகளில் சிங்கப்பூரின் தேவைகளை ஈடுகட்ட தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து துறைசார்ந்த அமைப்புகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் ஆலோசனை கூறும் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அக்குழு ஒவ்வொரு தொழில்துறையும் மின்னிலக்கமயமாதல் தொடர்பில் படிப்படியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நகலை இந்த ஆண்டுப் பிற்பகுதியில் சமர்ப்பிக்கும் என்றும் டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், உள்ளூர்த் தொழில் நுட்ப நிறுவனம் மிகைமெய்த் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள நடைப்பயிற்சிக் கருவி செய்தியாளர்களுக்குக் காட்டப்பட்டது.
கணினித் தரவுகளை மேகக் கணிமை முறையில் தொலைவில் இருந்து பயன்படுத்துவதைக் காட்டிலும் கருவிகளுக்கு அருகில் இருக்கும்படி அமைக்கும் 'எட்ஜ் கம்பியூட்டிங்' முறை தானியக்க வாகனங்கள் போன்றவற்றின் இயக்கத்தில் தேவையற்ற தாமதத்தைக் குறைக்க உதவும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
வருங்காலத்தில் இணையப் பாதுகாப்பை முறியடிக்கக்கூடிய நவீன கணினிக் கட்டமைப்புகள் உருவாக்கப்படலாம். அதனால் இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் இணையப் பாதுகாப்பு அம்சங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

