$143 மி. மோசடி: சாட்சியமளித்த நிறுவன முதலாளியின் உதவியாளர்
எண்ணெய் வர்த்தகப் பெருநிறுவன முதலாளி லிம் உன் குய்னிடம் உதவியாளராகப் பணியாற்றிய திருவாட்டி செரின் செங், $149 மில்லியன் மோசடியில் தன் முதலாளியின் உத்தரவுக்கேற்பச் செயல்பட்டதாக சாட்சிமளித்துள்ளார். 'எச்எஸ்பிசி' வங்கியை ஏமாற்றிப் பணம் பெறும் நோக்கில் ஹின் லியோங் நிறுவனம் சார்பில் போலியான ஆவணங்களைத் தயாரிக்க உதவியதாக நீதிமன்றத்தில் அவர் கூறினார். அதன்படி, பொருள்களை அனுப்புவதற்கு முன்னரே அவற்றுக்கான விற்பனைத் தொகையை வங்கியிடம் இருந்து லிம்மின் நிறுவனம் பெற்றுக்கொண்டது. தன் பிள்ளைகள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் தான் சிறை செல்ல நேரிடுவது குறித்து அஞ்சியதால் முன்னர் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை என்று திருவாட்டி செங் கூறினார். விசாரணை தொடர்கிறது.
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட நாய்கள் மரணம்; ஆடவருக்குச் சிறை
மலேசியரான 36 வயது கோபீஸ்வரன் பரமன் சிவன் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் 26 நாய்களையும் ஒரு பூனையையும் தனது லாரியில் சிங்கப்பூருக்குக் கடத்தி வந்தார். அவற்றில் 19 விலங்குகள் உயிரிழந்ததாக தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.
விலங்கு கடத்தல் தொடர்பில் சுமத்தப்பட்ட 20 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து கோபீஸ்வரனுக்கு நேற்று ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்கு கட்டுமானப் பொருள்களை ஏற்றிவரும் லாரியின் ஓட்டுநராகப் பணிபுரிந்த கோபீஸ்வரன், உயிருடன் கொண்டுவரப்படும் ஒவ்வொரு விலங்குக்கும் $75 என்ற அடிப்படையில் 2021ஆம் ஆண்டு முதல் நாய்கள், பூனைகள், கிளிகள் போன்றவற்றை மாதத்தில் இரண்டு, மூன்றுமுறை கடத்தியதாகக் கூறினார்.
பெட்டிகள், அழுக்குத் துணிகளுக்கான பைகள் போன்றவற்றில் வைத்து மூடி பின்னர் இருக்கைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விலங்குகள் கடத்தப்பட்டன. சென்ற ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி 26 நாய்களுடன் ஒரு பூனையையும் கடத்தி வந்தபோது துவாஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் கோபீஸ்வரனின் லாரியைச் சோதனையிட்டனர்.
அப்போது நாய்க்குட்டி ஒன்று பெட்டியில் இருந்து தப்பி லாரிக்குள் இருந்ததை அதிகாரி கண்டார். பெரிய நாய் ஒன்று இறந்து கிடந்ததையும் அந்கத அதிகாரி கண்டுபிடித்தார். மேலும் 18 நாய்கள் பின்னர் தொற்றுநோய் பாதிப்பால் மாண்டன.

