குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தெமாசெக் அறநிறுவனம் உபகாரச்சம்பளங்களை வழங்குகிறது. அதன்படி ஐந்து ஆண்டுகளுக்கு $4 மில்லியன் வழங்கப்படுகிறது. இந்த உபகாரச்சம்பளங்களைப் பெறும் மாணவர்கள் உயர்க்கல்வி முடிந்ததும் தெமாசெக் அறநிறுவனத்தில் சேர்ந்து பணிபுரியத் தேவையில்லை.
இவ்வாண்டு தொடங்கி 2027ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் 39 மாணவர்கள் இந்த உபகாரச்சம்பளம் மூலம் பலனடைவர். மொத்தம் கிட்டத்தட்ட 200 மாணவர்கள் பலனடைவர்.
உபகாரச்சம்பளம் பெறும் மாணவர்கள் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்து பயிலும்போது அவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் $3,000 வழங்கப்படும்.
பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சேர்ந்து பயிலும் உபகாரச்சம்பளம் பெறும் மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் முறையே $4,000, $5,000 பெறுவர்.
உபகாரச்சம்பளம் பெறும் மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா $2,000 பெறுமானமுள்ள குடும்ப அங்கீகார விருது வழங்கப்படும்.
இந்தத் தொகை மாணவர்கள் கல்வி பயிலும் காலகட்டதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கட்டம்கட்டமாக வழங்கப்படும்.
குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர் தற்காலிகமாக வேலை செய்வதை நிறுத்திவிட்டு உயர்கல்வி கற்கும்போது அக்குடும்பத்துக்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆதரவு வழங்கும் நோக்குடன் இந்த உபகாரச்சம்பளம் வழங்கப்படுவதாக தெமாசெக் அறநிறுவனம் கூறுகிறது.
உபகாரச்சம்பளத்துக்குத் தகுதி பெற மாணவர்கள் சிங்கப்பூரர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தின் தனிநபர் மாத வருமானம் $1,875க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
நேற்று முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த உபகாரச்சம்பளம் முதல்முறையாக வழங்கப்படுகிறது. இவ்வாண்டின் பிற்பகுதியில் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வோர் உபகாரச்சம்பளத்துக்கும் மறைந்த தொழிற்சங்கவாதிகளான திரு ஜி. முத்துகுமாரசாமி, திரு ஆர்.கே.எஸ். நாச்சியப்பன், திரு நித்தியானந்தன் ஆறுமுகம் ஆகியோரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கல்விப் பாதையைத் தொடரும் குறைந்த வருமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கூடுதல் ஊக்குவிப்பு தருவதே உபகாரச்சம்பளத்தின் இலக்கு என்று தெமாசெக் அறநிறுவனத்தின் திட்டங்கள் பிரிவுத் தலைவர் திரு லிம் ஹோக் சுவான் தெரிவித்தார்.
"குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த தனிநபர்கள் நிதி நெருக்கடி காரணமாக உயர்க்கல்வி பயில்வதில் கூடுதல் சிரமங்களை எதிர்நோக்கக்
கூடும்.
"தொழிற்சங்கவாதிகள் ஜி. முத்துகுமாரசாமி, ஆர்.கே.எஸ். நாச்சியப்பன், நித்தியானந்தன் ஆறுமுகம் ஆகியோரை முன்மாதிரியாக ஏற்றுச் செயல்பட மாணவர்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். மூவரும் கல்வியின் அருமையை உணர்ந்தவர்கள். அதுமட்டுல்லாது, வாழ்நாள் கற்றலையும் ஊக்குவித்தவர்கள்," என்று திரு லிம் தெரிவித்தார்.
திரு முத்துகுமாரசாமி 2019ஆம் ஆண்டில் காலமானார். அப்போது அவருக்கு 68 வயது. நாள் சம்பள ஊழியர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக அவர் பதவி வகித்தவர். அந்தத் தொழிற்சங்கம் 2021ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு பொது ஊழியர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கத்தில் இணைக்கப்பட்டது.
திரு நித்தியானந்தனும் திரு நாச்சியப்பனும் மின்சார, எரிவாயுத் துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தில் இருந்தவர்கள். திரு நித்தியானந்தன் அதன் நிர்வாகச் செயலாளராகவும் திரு நாச்சியப்பன் அதன் முன்னோடி உறுப்பினராகவும் இருந்தனர்.
திரு நித்தியானந்தன் 2007ஆம் ஆண்டில் 57 வயதில் காலமானார். திரு நாச்சியப்பன் 2021ஆம் ஆண்டில் 67 வயதில் காலமானார். இரண்டு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுடைய பிள்ளைகளுக்காக புத்தகப் பரிசுகளும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றுக்கு மறைந்த மூன்று தொழிற்சங்கவாதிகளின் பெயர் வைக்கப்பட்டுள்ளன.