சிங்கப்பூரர்கள் கனிவன்பையும் ஆக்ககரமான நடத்தையையும் சமூகப் பண்புகளாகக் கொண்டு இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அளவில் இப்பண்புகளை வெளிப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் சுய விழிப்புஉணர்வு எனும் முதிர்ச்சி பெற்ற நிலையைப் பிரதிபலிக்கும் என்றார் அவர்.
பிறரிடம் கனிவோடு நடந்துகொள்வதன் மூலம் மேம்பட்ட, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்ளவும் அத்தகைய நடவடிக்கைகள் உதவும் என்றார் அமைச்சர்.
நேற்று நடைபெற்ற முதலாவது தேசிய கனிவன்புக் கருத்தரங்கின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். சிங்கப்பூர் கனிவன்பு இயக்கமும் மகிழ்ச்சிக்கான திட்டமும் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் கருப்பொருள் 'கனிவான மக்கள், மகிழ்ச்சியான வேலையிடம்' என்பதாகும்.
கனிவன்பு இயக்கம் என்பது குறிப்பிட்ட சில நடத்தைகளோடு தொடங்கும் எனக் குறிப்பிட்ட திரு ஓங், குப்பை போடக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது, பேருந்து அல்லது ரயிலில் இருக்கையை தேவைப்படுவோருக்கு விட்டுக்கொடுத்தல் போன்றவற்றைச் சுட்டினார்.
உணவு உண்ட பின் தட்டுகளைத் திரும்ப வைத்தல், மின்னிலக்கக் கட்டணத்திற்கு முன்னுரிமை, சுகாதாரத் துறை ஊழியர்களைத் துன்புறுத்துவதை அறவே சகித்துக் கொள்ளாமை போன்ற அரசாங்கக் கொள்கைகளை அமைச்சர் சுட்டினார்.
மருத்துவமனைச் சூழலில் கவலை காரணமாக சிலர் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும் என்றாலும் துன்புறுத்தல் சுகாதார ஊழியர்களின் மனவுளைச்சலை அதிகரிக்கும் என்றாரவர்.
அனைவரும் ஒன்றுபட்டு துன்புறுத்தலை எதிர்க்கவேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.