சிங்கப்பூரில், சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டம் வெப்பமான வானிலை நிலவும் என முன்னுரைக்கப்பட்டு உள்ளதால் டெங்கிப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.
எனவே தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வாரியம் வலியுறுத்தியது.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இம்மாதம் 24ஆம் தேதி வரையிலான நிலவரப்படி சிங்கப்பூரில் 2,276 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2023ன் முதல் காலாண்டில் டெங்கியால் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.
இவ்வாண்டுத் தொடக்கத்தில், 'ஏடிஸ்' கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் புதிய வகை டெங்கிக் கிருமிக்கு எதிரான தடுப்பாற்றல் மக்களிடம் குறைவாக இருந்ததாலும் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. ஒரே வாரத்தில் 194 பேர் பாதிக்கப்பட்டனர்.
இன்னும் அந்த எண்ணிக்கை 100க்குமேல் பதிவாவதாக வாரியம் கூறியது.
பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்ட 371 டெங்கிப் பரவல் அபாயம் அதிகமுள்ள இடங்களில் கிட்டத்தட்ட 92 விழுக்காட்டு இடங்கள் இப்போது ஆபத்து நீங்கியவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பங்காளித்துவ அமைப்புகளும் சமூகத்தினரும் நல்கிய ஒத்துழைப்பு இதில் முக்கியப் பங்கு வகிப்பதாக வாரியம் சொன்னது.
'வோல்பாக்கியா-ஏடிஸ்' ஆண் கொசுக்களின் உற்பத்தி இதில் கைகொடுத்தது.
2022 செப்டம்பரில் இருந்து வாரத்திற்கு ஐந்து மில்லியன் என்ற எண்ணிக்கையில் இக்கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை பெண் ஏடிஸ் கொசுக்களுடன் கூடுவதால் அவை இனப்பெருக்கம் செய்வது தடுக்கப்படும்.
இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.