நோய்வாய்ப்படும் கடலோடிகளுக்கு டிரோன் எனப்படும் ஆளில்லா வானூர்திகள் மூலம் விரைவில் மருந்துகள் கொண்டு செல்லப்படலாம்.
மேலும் டிரோன் மூலம் கடலோடிகள் மருத்துவர்களுடன் தொலைமருத்துவ ஆலோசனையிலும் பங்கேற்கலாம். இதற்காக அவர்கள் கடல்தாண்டி தரைக்கு வரவேண்டியதில்லை.
எம்-1 தொலைத்தொடர்பு நிறுவனமும் ஃபுல்லர்டன் ஹெல்த் நிறுவனமும் இணைந்து நடத்தும் இச்சேவை வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும்.
சிங்கப்பூரின் கப்பல் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்காக இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
டிரோன்கள் பயன்பாடும் கடலில் காணொளி அழைப்புகளில் ஈடுபடுவதும் எம்-1 நிறுவனத்தின் 5ஜி கடல்துறைக் கட்டமைப்பால் சாத்தியமாகியுள்ளது.
அந்தக் கட்டமைப்பு நேற்று செயின்ட் ஜான்ஸ் தீவில் அறிமுகமானது. அந்தக் கட்டமைப்பு குறைந்தது 15 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வேலை செய்யக்கூடியது.
இதுபோன்ற வேறு இரண்டு நிலையங்கள் புக்கோம் தீவிலும் ராஃபிள்ஸ் கலங்கரை விளக்கத்திலும் இவ்வாண்டு பிற்பகுதியில் அமைக்கப்படும்.
வரும் 2025ஆம் ஆண்டுக்குள் மேலும் இதுபோன்ற ஒன்பது நிலையங்கள் சிங்கப்பூரின் தெற்கு கடலோர நீர்ப்பகுதியின் ஊழியர்களுக்காக செயல்படும்.

