செயல்திறன்மிக்க அரசாங்க உலகத் தரப் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதல் இடம்
செயல்திறன்மிக்க அரசாங்கம் தொடர்பிலான உலகத் தரப் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்தது. இப்போது சிங்கப்பூர். பின்லாந்தை முந்திக்கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
சிறப்பான தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்கு, வலுவான கழகங்கள், அறிவுபூர்வமான நிதி ஆளுமை, ஈர்ப்புமிக்க சந்தை, மக்கள் முன்னேற உதவுதல் ஆகியவற்றின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தப் பட்ட சிங்கப்பூர், சாண்ட்லர் நல்ல அரசாங்கக் குறியீடு எனும் பட்டியலில் முதல் நிலையைப் பிடித்தது.
அதேவேளையில், வலுவான சட்டங்கள் மற்றும் கொள்கைகள், உலகளாவிய செல்வாக்கு மற்றும் புகழ் ஆகிய இரு அம்சங்களில் சிங்கப்பூர், கடந்த ஆண்டில் பெற்ற மதிப்பெண்களைவிட இந்த ஆண்டு குறைவாகப் பெற்றது. சிக்கலான காலங்களில் சிங்கப்பூர் அரசாங்கம், திட்டங்களைச் செயல்படுத்துதல், உத்திபூர்வ முன்னுரிமை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் சிறப்பாக செய்ததாக இந்தக் குறியீட்டுக்குப் பொறுப்பான சாண்ட்லர் ஆளுமை கழகம் தெரிவித்தது.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் எடுத்த நடவடிக்கைகளையும் முடிவுகளையும் பாராட்டிய சாண்ட்லர் ஆளுமை கழகம், மற்ற நாடுகளைக் காட்டிலும் சவால்மிக்க காலத்தில் சிங்கப்பூர் நிமிர்ந்து நின்றதுடன், கிருமித்தொற்றுக்கு முந்தைய காலத்தில் பெற்ற பொருளியல் வளர்ச்சியைக் காட்டிலும் அது சிறப்பாகச் செய்தது என்றும் சொன்னது.
சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் சுவிட்சர்லாந்து, பின்லாந்து, டென்மார்க், நார்வே, சுவீடன், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், நியூசிலாந்து ஆகியவை பட்டியலில் இடம்பிடித்தன.
கொவிட்-19 நோயாளியின் மரணத்துக்கு பாரம்பரிய மருந்து காரணமாக இருக்கலாம்
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 61 வயது ஆடவர், 'லியன்ஹுவா சின்வென்' எனும் சீனப் பாரம்பரிய மருந்து (படம்) உட்கொண்ட பிறகு 'அனாபிலாக்ஸிஸ்' எனும் கடும் ஒவ்வாமையால் அவதியுற்று, பின்னர் மரணம் அடைந்தார். கோ சூன் லிம் எனும் அந்த ஆடவரின் மரணம் தொடர்பான முதல்நாள் விசாரணையில், சீனப் பாரம்பரிய மருந்தால் திரு கோவுக்கு கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டிருக்க லாம் என்று புலனாய்வு அதிகாரி நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திரு கோவின் மரணத்துக்கு கொவிட்-19 சுவாச பாதை தொற்றும் 'அனாபிலாக்ஸிஸ்' ஒவ்வாமையும் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 'லியன்ஹுவா சின்வென்' எனும் சீனப் பாரம்பரிய மருந்து சளிக் காய்ச்சலுக்காக உட்கொள்ளப்படுகிறது. மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடா முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த திரு கோவின் மகன், தம் தந்தை சீனப் பாரம்பரிய மருத்துவரைப் பார்க்காமல் தன்னிச்சை யாக 'லியன்ஹுவா சின்வென்' மருந்தை வாங்கினார் என்று கூறினார்.
அமைச்சர் மாலிக்கியின் புருணை பயணம்
பிரதமர் அலுவலக அமைச்சரும், கல்வி மற்றும் வெளி யுறவு இரண்டாம் அமைச்சருமான மாலிக்கி ஒஸ்மான் இம்மாதம் 23ஆம் தேதி முதல் நேற்று வரை புருணைக்கு தமது வருடாந்திர நோன்புப் பெருநாள் பயணம் மேற்கொண்டார்.
அப்பயணத்தின்போது டாக்டர் மாலிக்கி, புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவைச் சந்தித்து சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையே பலதுறைகளில் நீடித்துவரும் நீண்டகால உறவை மறுவுறுதிப்படுத்தினார்.
புருணையின் தற்போதைய, முன்னைய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை டாக்டர் மாலிக்கி பரிமாறிக்கொண்டார். அமைச்சருடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், நாடாளு மன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங், புருணைக்கான சிங்கப்பூர் தூதர் ஹெங் அய்க் ஆகியோர் சென்றிருந்தனர்.

