பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் தலையெடுத்துள்ளது.
தங்கள் நிலைப்பாட்டிலிருந்து ஓர் அரசியல் கட்சி மாற முடிவு செய்தால் அதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அதுதான் சிங்கப்பூரின் ஜனநாயகத்தில் நிலைநாட்டப்பட வேண்டியது என்பதில்தான் வாக்குவாதம் மையம் கொண்டுள்ளது.
அதிபரின் உரை மீதான நாடாளுமன்ற விவாதம் நடந்து ஒரு வாரம் கடந்த பிறகு, அப்போது பாட்டாளிக் கட்சி கூறியது தொடர்பில் நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று முன்தினம் மக்கள் செயல் கட்சியின் 'பெட்டிர்' வலைப்பதிவில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
நாடாளுமன்ற விவாதத்தின்போது, பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா, ஜிஎஸ்டி 7 விழுக்காடாக இருப்பதன் நியாயத்தை 2018ஆம் ஆண்டிலிருந்து தமது கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூறியதை மேற்கோள் காட்டிய திரு சீ, அது அந்தக் கட்சியின் நிலைப்பாட்டில் ஒரு பெரிய, வரவேற்கத்தக்க கொள்கை மாற்றம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்பில் பாட்டாளிக் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் எப்போதுமே தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்துள்ளோம் என்றும் இது தொடர்பாக திரு சீ, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பாமல், இப்போது கருத்து கூறுவது தங்களுக்கு வியப்பாக இருக்கிறது என்றும் தெரிவித்தது.
அமைச்சர் சீ தமது பதிவில், கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற விவாதத்துக்கு முன் பாட்டாளிக் கட்சி தான் ஜிஎஸ்டியை ஏற்றுக்கொள்வதாக சொன்னதே இல்லை என்றார். 1994ல் ஜிஎஸ்டி அறிமுகமானதிலிருந்து பாட்டாளிக் கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததையும் அதன் பிறகு வந்த ஒவ்வொரு ஜிஎஸ்டி அதிகரிப்பையும் எதிர்த்து வந்ததையும் திரு சீ சுட்டினார்.
"ஆக, அமைச்சர் ஓங் யி காங்கின் கேள்விக்கு, ஜிஎஸ்டி 7 விழுக்காடாக இருப்பதன் நியாயத்தை 2018ஆம் ஆண்டிலிருந்து தமது கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் இரண்டு விழுக்காடு ஜிஎஸ்டி உயர்வுக்குத்தான் தமது கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று சொன்னது வியப்பை ஏற்படுத்தியது," என்றார் திரு சீ.
மேலும் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து ஏன் இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் மாறாக ஒரு தெளிவற்ற நிலையில் அமைதியாக இருந்தார்கள் என்றும் திரு சீ வினவினார்.
"யார் கண்டார்கள், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டாளிக் கட்சியின் எதிர்கால தலைவர் 9% ஜிஎஸ்டியை ஏற்றுக்கொள்ளக்கூடும்," என்று சாடிய திரு சீ, ஒரு பொறுப்புள்ள எதிர்த்தரப்பு தங்கள் நிலைப்பாட்டிலும் கருத்துகளிலும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த பாட்டாளிக் கட்சி, 2018 நாடாளுமன்ற விவாதத்தின்போது தாங்கள் கூறியதாக சொல்லப்படுவதற்கு அப்போதே விளக்கம் கேட்காமல் அரசாங்கம் ஏன் இப்போது கேட்கிறது என்று வினவியது.
"எதிர்க்கட்சி தலைவர் பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் கூறியதுபோல, ஜிஎஸ்டி தொடர்பில் தங்கள் கட்சி கூறியதற்கு அப்போதே விளக்கம் கேட்காமல், இப்போது அது பற்றி கேட்பது சிங்கப்பூரர்களைத் திசை திருப்புவதாக உள்ளது," என்று அக்கட்சி தனது அறிக்கையில் கூறியது.
2018 நாடாளுமன்ற விவாதத்தின்போது தங்கள் கட்சி ஜிஎஸ்டியை பூஜ்ஜியம் விழுக்காட்டுக்குக் குறைக்க கேட்கவில்லை. அப்படி ஒருவேளை கட்சி அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் அதை வெளிப்படையாக செய்திருக்கும் என்று பாட்டாளிக் கட்சி கூறியது.
"மேலும் கடந்த வாரம் திரு பெரேரா, 2018 நாடாளுமன்ற விவாதத்தின்போது பாட்டாளிக் கட்சி ஜிஎஸ்டியை பூஜ்ஜியம் விழுக்காட்டுக்குக் குறைக்க கோரிக்கை விடுத்தது என்று கூறப்படுவதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டபோது, மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
"பாட்டாளிக் கட்சி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தில் 9% ஜிஎஸ்டியை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்று திரு சீ அனுமானமாகக் கூறினார். அதற்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், இன்று பாட்டாளிக் கட்சி கூறும் சில யோசனைகளின் அடிப்படையில் மக்கள் செயல் கட்சியும் எதிர்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும். பாட்டாளிக் கட்சியின் முன்னைய நிலைப்பாட்டை முன்னைய மசெக அரசாங்கங்கள் புதிய கொள்கைகளாக அறிவிக்கக்கூடும்," என்று அக்கட்சி தனது அறிக்கையில் கூறியது.
"பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக சந்தேகம் எழும்போது, திரு சீ நாடாளுமன்றத்திலேயே அக்கட்சியுடன் விவாதம் செய்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வார் என்று நம்புகிறோம். அதுதான் ஒரு சிறந்த அரசாங்கத்துக்கு நல்ல உதாரணம்," என்றும் கட்சியின் அறிக்கை கூறியது.

