துருக்கி நிலநடுக்கத்தில் தேடுதல், மீட்புப் பணி
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் துருக்கியில் ரிக்டர் அளவு 7.8 பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்பில் நடந்த தேடுதல், மீட்புப் பணிகளில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பங்கு
பெற்றது.
அதை அங்கீகரித்து பாராட்டு தெரிவிக்கும் வகையில் துருக்கி நாட்டு துணை அதிபர் விருது வழங்கியுள்ளதாக குடிமைத் தற்காப்புப் படை நேற்று தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியையும் அண்டை சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியையும் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நிலநடுக்கம் உலுக்கியது. இதையடுத்து, குடிமைத் தற்காப்புப் படை 68 பேர் அடங்கிய குழுவை மீட்புப் பணிகளில் உதவ துருக்கிக்கு அனுப்பியது.
'ஆபரேஷன் லயன்ஹார்ட்' எனப் பெயரிடப்பட்ட இந்த நட
வடிக்கையில், 'டார்ட்' எனப் பெயர் கொண்ட பேரிடர் உதவி, மீட்புக் குழுவில் மருத்துவ நிபுணர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தேடுதல் நிபுணர்கள், இந்த நடவடிக்கைக்கு தேவையான மற்ற ஊழியர்கள் யாவரும் இரண்டு பிரிவுகளாக அனுப்பப்பட்டனர். பத்து நாள்கள் நீடித்த இந்த நடவடிக்கையில், முன்னோடிப் பிரிவாக நகர்ப்புற சூழலில் தேடுதல், மீட்புப் பணிக்கு தேவையான கருவிகள், உயிர் சோதனைக் கருவிகள், கண்ணாடி இழை உருப்பெருக்கிகள் ஆகியற்றுடன் 20 பேர் துருக்கியின் தென் பகுதி நகரான காரமன்மராசுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி சென்றனர்.
பின்னர் இரண்டாவது குழுவாக 48 அதிகாரிகள், படையின் கே-9 பிரிவைச் சேர்ந்த நான்கு தேடுதல் நாய்கள், தேடுதல், மீட்புப் பணிக்கு தேவையான கூடுதல் கருவிகள், மருந்துப் பொருள்கள், தொலைத் தொடர்பு உதவி சாதனங்கள் ஆகியவற்றுடன் பிப்ரவரி 10ஆம் தேதி துருக்கி சென்றனர்.
துருக்கி நிலநடுக்கத்தில் 100,000 கட்டடங்கள் இடிந்து விழுந்தன; 50,000க்கும் மேலான உயிரிழப்பு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட விருதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சார்பாக டார்ட் பிரிவின் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் லோக் வீ கியோங் துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள அதிபர் மாளிகையில் பெற்றுக்கொண்டார்.