போதைப் பொருள் கடத்தல்காரரின் சீராய்வு மனு செவ்வாய்க்கிழமையன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மரண தண்டனையை நேற்று எதிர்நோக்கிக் காத்திருந்த அவருடைய இறுதிக்கட்ட முயற்சியாக இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தங்கராஜு சுப்பையா தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படியும் தமது வழக்கை மறுஆய்வு செய்யும்படியும் தாக்கல் செய்த அந்த மனுவை மேல்முறையீட்டு நீதிபதி ஸ்டீவன் சோங் நிராகரித்தார்.
தங்கராஜு சுப்பையா தமது வழக்கை மறுஆய்வு செய்ய நியாயமான காரணம் எதையும் தமது வாதத்தில் முன்வைக்கவில்லை என்று நீதிபதி ஸ்டீவன் சோங் 15 பக்க எழுத்துபூர்வமான தீர்ப்பில் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் கடத்தலில் மற்றொருவருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டு 1 கிலோகிராம் கஞ்சாவை பெற்றுக்கொள்ளும் செயலில் தங்கராஜு ஈடுபட்டதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர், தீர்ப்பு, தண்டனை இரண்டுக்கும் எதிரான அவரது மேல்முறையீடும் 2019ஆம் ஆண்டு நிராகரிக்கப்ட்டது.
அந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் தங்கராஜு தமது கூட்டாளியான மோகன் வேலுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக மேல்
முறையீட்டு நீதிபதி விளக்கினார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு தங்கராஜு தாக்கல் செய்த மற்றொரு சீராய்வு மனுவும் நிராகரிக்கப்
பட்டது.

