அடுத்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோ
னீசியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறிய நிறுவனங்கள் $173.6 பில்லியனை தொழில்நுட்பத்துக்கு செலவிட உள்ளன. இது இதற்கு முன் இருந்ததைவிட 70 விழுக்காடு அதிகமாகும் என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அதிலும், சிங்கப்பூரிலுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வர்த்தகங்களை மின்னிலக்கமயமாக்குவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக அறிக்கை கூறுகிறது. அதேசமயம், பாதிக்கு மேற்பட்ட நிறு
வனங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க தொழில்நுட்ப சேவையை பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
இதுபோன்ற இலக்குகளை கொண்டுள்ள பல உள்ளூர் நிறுவனங்கள், அடுத்த ஈராண்டுகளில் எந்ததெந்த துறைகளில் தாங்கள் முதலீடு செய்யலாம் என்ற வரைவுத் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. இதில் 70 விழுக்காட்டு நிறுவனங்கள், பொருள், சேவையில் புத்தாக்கம், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் வர்த்தக நடை
முறைகளில் கவனம் செலுத்த எண்ணம் கொண்டுள்ளன.
சிங்கப்பூரில் மையம் கொண்டு, விற்பனை, மின்னிலக்க முறையில் சந்தைப்படுத்து தல் போன்ற சேவைகளை வழங்கும் டிடிசிஎக்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வில் இந்த வட்டாரத்தின் 750 நிறுவனங்கள் பங்கேற்றன.
அதில் சிங்கப்பூரில் 36 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளில் கணிசமான பகுதியை மின்னிலக்க முறைக்கு மாற்றிவிட்டதாகக் தெரியவந்துள்ளது. ஒப்புநோக்க, இவ்வட்டாரத்தின் மற்ற நாடுகளில் 16லிருந்து 26 விழுக்காடு வரையிலான சிறிய, நடுத்தர நிறுவனங்களே மின்னிலக்கமயமாகி உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

