சமூகம், பொது, தொழில்துறை மேலும் சேர்ந்து அறப்பணியில் ஈடுபட ஊக்கமூட்டும்
உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதில் சமூக சேவைத் துறை ஒருமித்த கவனம் செலுத்துவதற்காகவும் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காகவும் 'சமூக உண்டியல்' என்ற நிதி 1983ல் அமைக்கப்பட்டது.
அந்த உண்டியல் பல்கிப் பெருகி இப்போது நூற்றுக்கணக்கான சமூக அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கிறது.
அந்த அமைப்புகள் மூலம் கிட்டத்தட்ட 100,000 மக்கள் ஆண்டுதோறும் பயனடைகிறார்கள்.
சமூகச் சேவை அமைப்புகளுக்கும் அவற்றின் செயல்திட்டங்களுக்கும் தனித்தனியாக நிதியளிப்பதற்குப் பதிலாக அத்தகைய அமைப்புகளில் மேலும் பல அமைப்புகள் சேர்ந்து செயல்பட ஊக்கமூட்டலாம் என்று இப்போது சமூக உண்டியல் ஆராய்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு தேசிய சமூகச் சேவை மன்றம் நேற்று புதிய ஒரு நிதியைத் தொடங்கியது.
அந்த நிதி, உதவி தேவைப்படுவோருக்கு உதவி கிடைக்கும் வகையில் சமூக, பொது, தொழில்துறை ஆகிய மூன்று துறைகளுக்கு இடையில் மேலும் ஒத்துழைப்புக்கு ஊக்கமூட்டும்.
இந்த வகை ஒத்துழைப்பின் விளைவாக பலனடைவோரின் எண்ணிக்கை பல மடங்காகும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், நேற்று நடந்த புதிய நிதி தொடக்க நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
புதிதாக தொடங்கப்பட்டு உள்ள நிதி '4எஸ்டி' (சமூக சேவைத் துறை உத்திபூர்வ பங்காளித்துவ ஊக்குவிப்பு நிதி) என்று குறிப்பிடப்படுகிறது.
"அமைப்புகள் சேர்ந்து ஒத்துழைத்து செயல்படுவதன் மூலம் யோசனைகள் பல மடங்காகப் பெருகும். ஆற்றல், வளங்கள் அனைத்தும் பன்மடங்காக அதிகரிக்கும்.
"இதனால் அதிகமானவர்களுக்கு உதவி கிடைக்கும்.
"அதோடு மட்டுமன்றி சேவைத் தரமும் கூடும். இந்த வகை உறவுகளை உருவாக்கி அவற்றைக் கொண்டு சமூகத்தைப் பலப்படுத்த நாம் விரும்புகிறோம்," என்று சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் குறிப்பிட்டார்.
4எஸ்டி பங்காளித்துவ நிதிக்காக சமூக உண்டியல் முதற்கட்டமாக $2 மில்லியன் திரட்டி இருக்கிறது. கூட்டுத் திட்டங்களுக்காக அந்த நிதியைப் பெற சமூக அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.
தனிப்பட்ட செயல்திட்டங்களுக்கான நிதி ஆதரவைப் போல் அல்லாமல், 4எஸ்டி பங்காளித்துவ நிதி, வெவ்வேறான நிதி வளங்களைத் திரட்டும். அவற்றைக் கொண்டு அதிக நற்பயன்களை உண்டாக்கக்கூடிய பெரிய திட்டங்களுக்கு அது ஆதரவு அளிக்கும்.
சமூக சேவை அமைப்புகளைப் பொறுத்தவரை அவை தங்கள் செயல்திட்டங்களை நிறைவேற்ற ஒரே இடத்தில் நிதியைப் பெற்றுவிடலாம். புதிய நிதி தொடக்க நிகழ்ச்சியை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நடத்தினார். சமூக உண்டியலின் 40வது ஆண்டைக் குறிக்கும் வகையில் 40 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஏஜிஓபி என்ற வள்ளல்கள் குழுமம், டிபிஎஸ் வங்கி, என்டியுசி ஃபேர்பிரைஸ் அறநிறுவனம், சிங்கப்பூர் பங்குச் சந்தை, சிங்டெல் ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும் நேற்று $100,000 நன்கொடை வழங்கின. நேற்றைய நிகழ்ச்சி மூலம் சமூக உண்டியலுக்கு $1 மில்லியனுக்கும் அதிகத் தொகை திரண்டது.
நிறுவனங்களும் தனிநபர்களும் www.comchest.gov.sg/sosp என்ற முகவரி மூலம் சமூக உண்டியலுக்கு நன்கொடை வழங்கலாம்.