சிங்கப்பூர் பொருளியலும் இதர பொருளியல்களும் இந்த ஆண்டு முழுமூச்சில் முற்றிலும் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் முதலாளிகள் தொழில்துறை உருமாற்ற முயற்சிகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரவேண்டும். அதன்மூலம் புதிய வளர்ச்சி, வாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். உற்பத்தித்திறன் மிக்கவர்களாகத் திகழ வேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளத்தின் தலைவர் டாக்டர் ராபர்ட் யாப் தமது மே தினச் செய்தியில் தெரிவித்து இருக்கிறார்.
முதலாளிகள் உருமாற்ற முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த வேலைகளை உருவாக்க ஆதரவாக தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் சேர்ந்து இந்தச் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
புதிய சிறந்த வேலைகளுக்கு புதுப்புது தேர்ச்சிகள் தேவைப்படும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்கள் தொழில்துறை உருமாற்றப் பயணத்தில் ஊழியர்களையும் அரவணைத்துக் கொண்டு முதலாளிகள் அவர்களுக்கு மறுதேர்ச்சி அளிக்க வேண்டும் என்றார்.
"அதேவேளையில், ஊழியர்களும் தங்களுடைய சொந்த மேம்பாட்டிற்குத் தாங்களே பொறுப்பெடுத்துக்கொண்டு முதலாளிகளுடன் சேர்ந்து செயல்பட்டு புதிய தேர்ச்சிகளை அடையாளம் கண்டு அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
"வாழ்நாள் கல்வியை அவர்கள் கைக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எப்போதும் பொருத்தமானவர்களாக, வேலை கிடைக்கக்கூடியவர்களாக ஊழியர்கள் திகழ வேண்டும்," என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
சிறந்த வேலைகளை உருவாக்குவதும் ஊழியர்களுக்குப் புதுப்புது தேர்ச்சிகளை அளிப்பதும் ஒருபுறம் இருக்க, மனிதவள அமைச்சு, என்டியுசி ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும் இன்னும் சிறந்த வாழ்க்கைத்தொழிலை உருவாக்கித் தர சம்மேளனம் பாடுபட்டு வருகிறது என்பதையும் அவர் சுட்டினார்.
சிங்கப்பூர் பொருளியல் சென்ற ஆண்டில் 3.6% வளர்ந்தது. மொத்த வேலை நியமனங்கள் சென்ற ஆண்டில் 231,700 ஆகக் கூடின. வேலையின்மை, ஆட்குறைப்பும் குறைந்தன.
என்றாலும் உற்பத்தித்திறன் சென்ற ஆண்டில் 0.8% குறைந்தது என்பதை சுட்டிக்காட்டிய திரு ராபர்ட் யாப், தொழில்துறை உருமாற்றம் மூலம் முதலாளிகள் உற்பத்தித்திறன் மிக்கவர்களாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முதலாளிகள் சார்பில் அனைத்து ஊழியர்களுக்கும் அவர் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

