நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) வளாகத்தில் உள்ள 'தி ஹைவ்' என்ற ஒரு கட்டடத்தில் குரங்குகள் அப்போதைக்கு அப்போது தொல்லை கொடுக்கின்றன.
உணவு, பானம் மட்டுமன்றி மின்னணுச் சாதனங்களையும் தூக்கிச் சென்று அங்கும் இங்கும் போட்டுவிட்டு அவை போய்விடுகின்றன.
இதனை அடுத்து அந்தப் பல்கலைக்கழகம் இம்மாதம் 20ஆம் தேதி மாணவர்களுக்கு ஆலோசனை அறிக்கை ஒன்றை அனுப்பியது.
குரங்கைக் கண்டால் அதனிடம் இருந்து குறைந்தபட்சம் மூன்று மீட்டர் விலகி இருங்கள்; குரங்கை நேரே முறைத்துப் பார்ப்பது, அருகே போவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்;
குரங்குகளைக் கடந்து செல்லும்போது எதையாவது சாப்பிட்டுக்கொண்டே, குடித்துக்கொண்டே போவதைத் தவிர்த்துவிடுங்கள்; குரங்குகள் சாப்பிட எதையும் கொடுக்காதீர் என்று மாணவர்களிடம் கழகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இது பற்றி விளக்கிய பல்கலைக்கழகப் பேச்சாளர், சட்டத்தின்படி குரங்குகள் பாதுகாக்கப்படும் வனவிலங்குகள் என்பதால் அவற்றை வேறு இடங்களில் கொண்டுவிடுவது போன்றவை தொடர்பில் தேசிய பூங்காக் கழகத்துடன் தங்கள் கல்வி நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
குரங்குகளுக்கு எதிராக அண்மைய ஆண்டுகளில் பாதுகாப்பை என்டியு அதிகமாக்கி வந்துள்ளது.
அது, தன் வளாகத்தில் அடிக்கடி தென்பட்ட மூன்று குரங்குகளைப் பூங்காக் கழகத்துடன் சேர்ந்து செயல்பட்டு சென்ற ஆண்டு ஜூன் மாதம் காட்டில் கொண்டுவிட்டது.
குரங்குகள் தொல்லை தர முடியாத அளவுக்கு 1,200க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகளைப் பாதுகாப்புமிக்க வையாக என்டியு மாற்றியது.
மாணவர்கள், குறிப்பாக தாங்கள் அறைகளில் இல்லாதபோது கதவுகளை, சன்னல் கதவுகளைப் பாதுகாப்பாக மூடிவிட வேண்டும்;
உணவை குரங்குகளின் கண்ணுக்குத் தெரியும்படி வைக்கவேண்டாம் என்றும் மாணவர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளதாக அந்தப் பேச்சாளர் கூறினார்.
வனவிலங்குகளுடன் வாழ்வது பற்றி போதிக்கும் பயிலரங்குகள், உரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்படி மாணவர்களுக்கு என்டியு ஊக்கமூட்டியும் வருகிறது.