கி ஜனார்த்தனன்
குடியிருப்புப் பேட்டைகளின் தூய்மையைக் கட்டிக்காக்கும் துப்புரவுப் பணியாளர்களைக் கெளரவிக்கும் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் தயாரித்த 135 அன்பளிப்புப் பைகள் விநி யோகிக்கப்பட்டன.
புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள செங்ஹுவா தொடக்கப்பள்ளியும் ஹாலந்து- புக்கிட் தீமா நகர மன்றமும் இரண்டாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ள 'அன்சங் ஹீரோஸ்' நிகழ்ச்சியில் 51 மாணவர்கள், நேற்று அன்பளிப்புப் பைகளை வழங்கியதுடன் துப்புரவுப் பணியாளர்களுடன் சேர்ந்து மதிய உணவை உட்கொண்டனர்.
புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோடு புளோக் 234A-க்கு அருகிலுள்ள பாங்கிட் கோர்ட் பல பயன் அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சி, நோன்புப் பெருநாளை ஒட்டிய ஆடல் பாடல் அங்கங்களைக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சிக்கான ஆயத்தப் பணிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னரே தொடங்கியதாக அப்பள்ளி தமிழ் முரசிடம் தெரிவித்தது.
பள்ளியின் ஒவ்வொரு வகுப்பும் 10 நன்கொடைப் பைகளைத் தயாரித்தன. 'மேகீ நூடல்ஸ்', பற்பசை, பல் துலக்கிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அப்பைகளில் நிரப்பப்பட்டிருந்தன.
பைகளைப் பெறும் துப்புரவுப் பணியாளர்கள் அனைவருமே புக்கிட் பாஞ்சாங்கில் பணிபுரிபவர்கள். அவர்களில் 55 பேர் சிங்கப்பூரர்கள் என்றும் 73 பேர் வெளிநாட்டினர் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட துப்புரவுப் பணியாளர் சின்னம்மா சுந்தரராஜு, 72, அவர்களது அன்பு வார்த்தைகளால் அகமகிழ்ந்ததாகக் கூறினார்.
"காலை 6.30 மணிக்கு வேலை செய்ய ஆரம்பித்தேன். களைத்துப் போன என்னை இந்நிகழ்ச்சி மேலும் உற்சாகப்படுத்தியது," என்று ஜெலாப்பாங் வட்டாரத்தில் வசிக்கும் திருமதி சின்னம்மா கூறினார்.
திருமதி சின்னம்மாவுக்கு ஏற்பட்ட மனநிறைவு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களின் வார்த்தைகளிலும் தென்பட்டது.
துப்புரவுப் பணியாளர்கள் தங்களின் அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதாகக் கூறிய தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவி நந்தனா ஸ்ரீ, 11, அவர்களுக்குச் சமுதாயம் கூடுதல் மதிப்பைத் தரவேண்டும் என்றார்.
பணியாளர் தங்களிடம் அன்பாகப் பேசியது பிடித்திருந்ததாகக் கூறிய மற்றொரு மாணவி நிவ்ரித்தி, 11, பணியாளர்கள் அன்பளிப்புப் பைகளை மகிழ்ச்சியுடன் பெற்றதாகக் கூறினார்.
"அவர்கள் நிகழ்ச்சியை ரசித்து உணவை வயிறார சாப்பிட்டதைக் கண்டு நானும் மகிழ்ந்தேன்," என்று அவர் கூறினார்.

