'சாஸ்' எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்ட அட்டைகளை, 15 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் இனி 'சிங்பாஸ்' செயலி வழியாகப் பயன்படுத்த முடியும். இதனால் கையில் சாஸ் அட்டைகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மின்னிலக்க முறைக்கு மாறினாலும் புதிய விண்ணப்பதாரர் களுக்கு தொடர்ந்து வழக்கமான சாஸ் அட்டைகள் விநியோகிக் கப்படும் என்றும் இவற்றை பொது மருந்தகங்களும் பல் மருந்தகங்களும் ஏற்றுக்கொள்ளும் என்றும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது. பொதுமக்களின் வசதிக்காக மின்னிலக்க முறையில் பயன் படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.
மருந்தகங்களுக்குச் செல்லும்போது சாஸ் கழிவுகளைப் பெற மின்னிலக்க அல்லது வழக்கமான அட்டை ஆகிய இரண்டையும் பயன்படுத்தலாம்.
நீலம், ஆரஞ்சு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் வழங்கப் படும் சாஸ் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பொது மருந்தகங்கள், பல் மருந்தகங்களில் சிகிச்சைக்கான செலவில் கழிவுகளைப் பெறலாம்.
சாஸ் அட்டையின் நிறத்தைப் பொறுத்து கழிவு மாறுபடும்.
புதிய விண்ணப்பதாரர் களுக்கு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மறுநாளே மின்னிலக்க 'சாஸ்' அட்டைகளை 'சிங்பாஸ்' செயலி வழியாகப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே 'சாஸ்' அட்டை வைத்திருப்பவர்கள் 'சிங்பாஸ்' செயலியில் 'My Cards' என்ற பிரிவில் அது இடம்பெற்றுள்ளதைக் காண முடியும்.
அதே சமயம் மின்னிலக்க சாஸ் அட்டையை கைப்பேசித் திரை வழியாகப் படம்பிடித்து பயன் படுத்துவதற்கு எதிராக எச்சரித்த சுகாதார அமைச்சு, இது, மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும் என்றது.

