50% கழிவு: என்டியுசி அறிவிப்பு
மே தினம் என்றழைக்கப்படும் தொழிலாளர் தினக் கொண்டாடத்தையொட்டி அரிசி உள்ளிட்ட அத்தியா வசியப் பொருள்களுக்கு கழிவு வழங்கப்படும் என்று என்டியுசி ஃபேர்பிரைஸ் குழுமம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் அடுத்த நான்கு வாரங்களுக்கு தீவு முழுவதும் உள்ள அதன் பேரங்காடிகளில் என்டியுசி சங்க உறுப்பினர்களுக்கும் 'லிங்க்' உறுப்பினர்களுக்கும் 50 விழுக்காடு கழிவு விலையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்கப்படும்.
தொழிலாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அதிகரித்து வரும் செலவை சமாளிக்க இந்தக் கழிவு உதவியாக இருக்கும் என்று குழுமம் தெரிவித்தது.
ஏப்ரல் 27ஆம் தேதியிலிருந்து மே 21ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் ரொட்டி, எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருள்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பொருள்களுக்கு கழிவு வழங்கப்படும். தொடக்கமாக, மே 1ஆம் தேதி வரையிலான முதல் வாரத்தில் மிகவும் பிரபலமாக விற்கப்படும் அரிசி பொட்டலங்கள் 50% விலைக் கழிவில் விற்கப்படும். உதாரணமாக, பத்து கிலோ கோல்டன் ஃபீனிக்ஸ் தாய் ஹோம் மாலி அரிசி வழக்கமாக $26.90க்கு விற்கப்படுகிறது. கழிவுக்குப் பிறகு அது $13.45க்கு விற்கப்படும்.
17 வயது இளையர் கைது
கடன் முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 17 வயது இளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இம்மாதம் 23ஆம் தேதி சுவா சூ காங் அவென்யூ 1ல் உள்ள ஒரு வீட்டின் கதவு, சைக்கிள் பூட்டும் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டின் சுவரில் வார்த்தைகள் கிறுக்கப்பட்டிருந்தன. இது குறித்து புகார் வந்ததால் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர் கண்காணிப்புக் கேமராக்களை ஆராய்ந்து இளையரை அடையாளம் கண்டனர்.
இதையடுத்து ஏப்ரல் 26ஆம் தேதி இளையர் கைது செய்யப்பட்டார்.

