சிங்கப்பூரின் இளையர்கள் புதிய வேலையை வழிகாட்டியுடன் முயற்சி செய்து பார்க்கும் முன்னோடித் திட்டம் ஒன்றை என்டியுசி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் இவ்வாண்டின் இரண்டாவது பாதியில் செயல்படுத்தப்படும் என்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தெரிவித்தது.
கேரியர் ஸ்டார்ட்டர் லேப் எனும் வேலையிடப் பயிற்சித் திட்டத்தில் தொழில்நுட்ப கல்விக் கழகம், பலதுறைத் தொழில்கல்லூரி, பல்கலைக்கழகப் பட்டதாரிகள் சேர்ந்து பயனடையலாம்.
தேசிய சேவையை முடித்தவர்கள், படிப்பை முடித்தவர்கள் முதல் முறையாக வேலையில் சேர இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.
இளையர்கள் அனைவரும் அவர்களுக்கு ஏற்ற நிறுவனங்களில் வேலையை முயற்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அங்கு மூன்று மாத காலம் வழிகாட்டியின் உதவியுடன் வேலையிடப் பயிற்சியை பெறலாம் என்று என்டியுசி தெரிவித்தது.
வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் புதிய முன்னோடித் திட்டத்தை தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் அறிவித்தார்.
ஊழியர் அணியில் சேர விரும்பும் இளையர்களுக்கு உதவ விரும்புகிறோம் என்று நிகழ்ச்சியில் பேசிய திரு இங் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் கொவிட்-19 நெருக்கடி காலத்தில் வாழ்க்கைத் தொழிலைத் தொடங்க முடியாத இளையர்கள் மனச்சோர்வு அடைந்தனர். இத்தகையோருக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் இளையர்களின் வேலைகளையும் அவர்களுடைய விருப்பங்களையும் புரிந்துகொள்வதற்காக இளையர் பணிக் குழு ஒன்றை தொழிற்சங்க இயக்கம் அமைத்தது.
இந்தப் பணிக்குழு இதுவரை 10,000 பேருக்கு கைகொடுத்துள்ளது.
பள்ளி மற்றும் தேசிய சேவையை முடித்த பிறகு முதல் முறையாக வேலைக்குச் சென்றபோது பதற்றமான உணர்வு இருந்ததாக பல இளையர்கள் கூறினர் என்று இளையர் என்டியுசி நிர்வாகச் செயலாளரான வெண்டி டான் தெரிவித்தார்.
அவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று கேட்டதற்கு தரமான வழிகாட்டலுடன் முறையான பயிற்சியை அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு ஏற்ப முன்னோடித் திட்டம் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின்கீழ், முழு நேர ஓராண்டு ஒப்பந்தத்தின்கீழ் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
ஏற்கெனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், யுனிகுளோ, ரோல்ஸ் ராய்ஸ், சிங்டெல், காப்தார்ன்ஸ் கிங்ஸ் ஹோட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டத்தில் இணைந்துள்ளன என்று கூறிய திரு இங், குறைந்தது நூறு நிறுவனங்கள் இதில் சேர முன் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இத்தகைய நிறுவனங்களில் இளையர்கள் புதிய வேலையை மூன்று மாதத்திற்கு முயற்சி செய்து பார்க்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் வேலையைப் பொறுத்து 1,800 வெள்ளி முதல் 4,200 வெள்ளி வரை வழங்கப்படும்.
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்துடன் சேர்ந்து என்டியுசி, வேலையிட வழிகாட்டிகளுக்குப் பயிற்சியளிக்கவும் முடிவு செய்துள்ளது.

