வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீட்டு விலைகள் மட்டுப் படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் கழகத்தின் மறுவிற்பனை வீட்டு விலைகள் ஒரு விழுக்காடு மட்டுமே கூடியது. இது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத குறைவான விலையேற்றமாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 2.3 விழுக்காடு மறுவிற்பனை வீட்டு விலைகள் அதிகரித்தன. ஆனால் இவ்வாண்டின் முதல் காலாண்டில் இதில் பாதிக்கும் குறைவாகவே விலை கூடியுள்ளது. முதல் காலாண்டில் மறுவிற்பனை வீடுகளின் விற்பனை எண்ணிக்கை 5.8 விழுக்காடு அதிகரித்து 6,979 பரிவர்த்தனைகள் இடம்பெற்றன. இது, இதற்கு முந்தைய காலாண்டில் 6,597ஆக இருந்தது. அதிக வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டது, 2022 செப்டம்பரில் சொத்துச் சந்தையை மட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நட வடிக்கைகள் ஆகியவை வீட்டு விலையை நிலைப்படுத்துவதற்கு பங்காற்றியுள்ளது. "அண்மைய மாதங்களில் அதிக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதால் கழக வீடுகளுக்கான பற்றாக் குறை தணிந்தது," என்று ஆரஞ்ச்டீ அண்ட் டையின் பகுப்பாய்வு, ஆய்வுப் பிரிவின் உதவித் தலைவர் கிறிஸ்டைன் கூறினார். அரசாங்கம் தொடர்ந்து தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளை கட்டி முடித்து விற்பனைக்கு வெளியிட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை அதிக நான்கறை வீடுகள், சிறிய வீடுகள் என 5,000 வீடுகள் விற்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022ஆம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களில் 4,622 வீடுகள் விற்கப்பட்டன. ஐந்தறை வீடுகளின் விற்பனை 1.3 விழுக்காடு கூடி 1,545ல் இருந்து 1,565 வீடுகள் விற்கப்பட்டன.

