கேரொசல் இணையத்தளத்தில் பழைய அரிய பொருள்களை வாங்கிய சிங்கப்பூரர், எட்டு மாதங்களாகத் தேடி சிங்கப்பூரிலிருந்து 6,000 கிலோ மீட்டர் தொலைவில் வசித்த அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரொசல் தளத்தில் விற்கப்படும் பொருள்களை திரைப்படத் தயாரிப்பாளர், நூலாசிரியர், திரைப்பட விரிவுரையாளரான வெஸ்லி அருசூ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அரிய ஆவணங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு அவரது கண்களில் பட்டது. மொத்த ஆவணங்களையும் அவர் எண்பது வெள்ளிக்கு வாங்கினார்.
ஜெர்மானிய நாஜி காலத்தின் கையேடுகள், தபால் தலைகள், குடும்பப் புகைப்படங்கள் உள்ளிட்டவை அவற்றில் இடம்பெற்றிருந்தன.
1922, 1924 ஆம் ஆண்டில் அடுத்தடுத்த பிறந்த ஜெர்மானிய சகோதரர்களான வோல்டமர், வோல்ஃப்காங் ஷெக் ஆகியோருக்குச் சொந்தமான ஆவணங்கள் அவை. உலகப்போர் காலத்தில் அவர்கள் பணியாற்றியது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு சான்றிதழ், 1967ல் வோல்டிமார் தனது மனைவி நான்கு மகன்களுடன் ஆஸ்திரேலியாவில் குடியேறியதைக் காட்டியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டி அளித்த அருசூ, 39, கையேட்டில் இடம்பெற்று இருந்த சுவஸ்திகா முத்திரை தனது கவனத்தை ஈர்த்ததாகக் கூறினார்.
"இரண்டு ஆடவர்கள் வாழ்ந்த வாழ்க்கை குறித்த ஆவணங்கள் பல தகவல்களைக் கொண்டிருந்தன. எப்படியாவது ஆவணங்களை அவர்களின் குடும்பத்திடம் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.
ஒரு வழியாக, கடந்த ஆண்டு அக்டோபரில் குவீன்ஸ்லாந்து ரயில்வே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பட்டியலில் இடம்பெற்றிருந்த திரு மைக்கல் ஷெக் என்பவரை குடும்பப் பெயர் மூலம் அவர் அடையாளம் கண்டுபிடித்தார். இவர், வோல்டிமார் ஷெக்கின் மகன். ரயில்வே நிறுவனம் வழியாக அவருடன் தொடர்புகொண்டு அருசூ பேசினார்.
பின்னர் மெல்பர்ன் நகரில் அருசூ தனது மனைவியுடன் திரு ஷீக்கை சந்தித்து ஆவணங்களை ஒப்படைத்தனர்.
"எங்களுடன் தொடர்புகொள்ள அருசூ எடுத்த முயற்சிகள் எங்களை வியப்படைய வைத்தது. வேறு யாராவது இருந்தால் பழைய ஆவணங்களை குப்பையில் வீசியிருப்பார்கள்." என்று திரு ஷெக் தெரிவித்தார்.

