கருணாநிதி துர்கா
போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர் சிவில் விமானப்போக்கு வரத்து ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் கடல்துறை ஆணையம், பொதுப் போக்குவரத்து மன்றம் இணைந்து போக்குவரத்து அமைச்சு குடும்ப தொண்டு திட்டங்களின் மூலம் நிதி திரட்டியுள்ளன.
இத்திட்டங்களின் மூலம் சமூக உண்டியலுக்காக ஈராண்டு காலகட்டத்தில் சிங்கப்பூரில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக் காக ஒரு மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.
2010ல் முதன்முதலில் அறி முகப்படுத்தப்பட்ட இத்திட்டம் இதுவரை சமூக உண்டியலுக்காக $12 மில்லியனுக்கும் மேல் நிதி திரட்டியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் போக்கு வரத்து அமைச்சின் ஏற்பாட்டில் சமூக உண்டியலின் பயனாளி களுக்காக அறப்பணி நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாண்டு நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக ஏப்ரல் 28ஆம் தேதியன்று ஃபெய் யூவே குடும்ப சேவைகளிலிருந்து கிட்டத்தட்ட 26 பிள்ளைகளுக்காக நிலப் போக்குவரத்து ஆணைய மின்னிலக்க சோதனைக் கூடம் சுவாரசியமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், நிதி மற்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்து மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் வருகை புரிந்திருந்தனர்.
ஆறு வயது முதல் 12 வயது வரையிலான இப்பிள்ளைகள் மெய்நிகர் விளையாட்டுகள், சில கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட விளையாட்டுகள் என இருவழித் தொடர்பு அம்சமுடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பொதுப் போக்குவரத்தில் நாம் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புள்ள நடத்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்நடவடிக்கைகள் அமைந்தன.
"சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதில் போக்குவரத்து அமைச்சு மகிழ்ச்சி கொள்கிறது. போக்கு வரத்து அமைச்சு தொடர்ந்து சமூக உண்டியலுக்கும் அதன் பயனாளிகளுக்கும் ஆதரவு அளிக்கும்," என்றார் அமைச்சர்.
"பிறரின் வாழ்வை மேம்படுத்தும் இந்த பங்காளித்துவம் நீடிக்க வேண்டும். பல தனிநபர்கள், சமூகத்தினரின் வாழ்வை இத்திட்டங்களும் நடவடிக்கைகளும் மேம்படுத்தியுள்ளன," என்று சமூக உண்டியலின் தலைவரான திரு சியூவ் சுட்டாட் கூறினார்.