ஏழு வயது முதல் 20 வயது வரையிலான 540,000 சிங்கப்பூர் மாணவர்களின் எடுசேவ் கணக்குகளில் அல்லது உயர்நிலைக்குப் பிந்திய கல்விக் கணக்குகளில் மே மாத இறுதிக்குள் ஒருமுறை தொகையாக $300 நிரப்பப்படும்.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்ட மேம்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தப் பணம் நிரப்புதல் இடம்பெறுகிறது என்று கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது.
ஆண்டுதோறும் அரசாங்கம் வழங்கும் எடுசேவ் பங்களிப்புக்கு மேலாக இந்தப் பணம் நிரப்புதல் அமைகிறது என்றும் இது தங்கள் பிள்ளைகளுக்கு செரிவூட்டும் வகுப்புகள் போன்ற கல்வி தொடர்பான செலவுகளை ஈடுகட்ட குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவாக அமையும் என்றும் அமைச்சு விளக்கியது.
இந்த ஆண்டு அரசாங்கத்தின் வருடாந்திர பங்களிப்பாக, தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரின் எடுசேவ் கணக்கிலும் $230 போடப்படும். உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கணக்கில் $290 போடப்படும்.
தகுதியுள்ள மாணவர்களின் எடுசேவ் கணக்குகளில் இத்தொகை தானாக வரவு வைக்கப்படும். இதன் தொடர்பில் பணம் பெறும் மாணவர்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
பணம் நிரப்பப்பட்டவுடன் மாணவர்களின் பெற்றோருக்கு சிங்பாஸ் செயலி வழியாக அல்லது குறுஞ்செய்தி வழியாகத் தெரிவிக்கப்படும்.

