தற்காப்புப் படையின் முன்னாள் தலைவர் மெல்வின் ஓங் (படம்) வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் தற்காப்பு அமைச்சின் தற்காப்பு மேம்பாட்டுக்கான நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பேற்பார் என்று பொதுச் சேவைத் துறை நேற்று தெரிவித்தது. அவர் அதே நாளில் தற்காப்பு அமைச்சிலிருந்து பதவி ஓய்வு பெறுவார்.
திரு சான் ஹெங் கீ தற்போது கவனித்துவரும் தற்காப்பு மேம்பாட்டுக்கான நிரந்தரச் செயலாளர் பொறுப்பை திரு ஓங் ஏற்றுக்கொள்வார். திரு சான் தற்காப்புக்கான நிரந்தரச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார்.
லெஃப்டினண்ட் ஜெனரல் ஓங், 48, சிங்கப்பூர் ஆயுதப்படையின் வெளிநாட்டு உபகாரச் சம்பளம் பெற்று, 1994ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்ந்தார். அது முதல் தற்காப்பு அமைச்சின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஜெனரல் ஓங், ராணுவப் படைத் தலைவர், தற்காப்புப் படைத் தலைவர் முதலிய பதவிகளை வகித்தார்.
2013க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் திரு ஓங், தற்காலிகமாக அரசாங்க சேவைக்கு மாற்றப்பட்டு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் இயங்கும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் துணைத் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றார்.

