முதலீட்டு மோசடி: பொருளியல் நிபுணர் எச்சரிக்கை
தமது பெயரைச் சொல்லி முதலீட்டு மோசடி நடப்பதாக பிரபல பொருளியல் நிபுணர் டான் கீ கியாப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மோசடி வலையில் சிக்கி பெண் ஒருவர் $20,000க்கும் அதிகமான தொகையை இழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோசடி பற்றி கடந்த பிப்ரவரி மாதம் தமக்குத் தெரியவந்ததாக பசிபிக் பொருளியல் ஒத்துழைப்புக்கான சிங்கப்பூர் தேசிய குழுவின் தலைவரான டாக்டர் டான் கூறினார்.
தமது தலைமையின்கீழ் இயங்குவதாகக் கூறிக்கொள்ளும் முதலீட்டுக் குழுவுடன் பதிவு செய்துகொண்டதாகப் பலர் தம்முடன் தொடர்புகொண்டு கூறியதை அடுத்து, மோசடி குறித்து தெரிந்துகொண்டதாக 65 வயது டாக்டர் டான் கூறினார்.
தமது பெயரைச் சொல்லி நடத்தப்படும் முதலீட்டு மோசடிக்கு எதிராக அவர் காவல்துறையிடம் புகார் செய்தார்.
இளையர்களை ஈர்க்க பயங்கரவாதிகள் முயற்சி
இளையர்களை ஈர்க்க பயங்கரவாத அமைப்புகள் புத்தாக்கமிக்க அணுகுமுறைகளைக் கையாண்டு வருவதாக உள்ளூர் ஆலோசகர்களும் சமயத் தலைவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களது சித்தாந்தத்தை இளையர்களிடம் பரப்ப பயங்கரவாதிகள் புத்தாக்கமிக்க முயற்சிகளில் இறங்கியிருப்பதாக அறியப்படுகிறது.
இதுகுறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யூடியூப் போன்ற தளங்களிலிருந்து பயங்கரவாதம் தொடர்பான காணொளிகளை கூகல் தொடர்ந்து அகற்றிவரும் நிலையில், பயங்கரவாதிகள் இணையத்தில் உள்ள வேறு தளங்கள் மூலமாகவும் காணொளி விளையாட்டுகள் மூலமாகவும் தங்கள் சித்தாந்தத்தைப் பரப்பி இளையர்களை ஈர்க்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இணையம் மூலம் இளையர்களுக்குத் தீங்கு விளைவிக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றின்மூலம் பயங்கரவாத சித்தாந்தங்களைப் பரப்பும் காணொளிகளை உடனடியாக இணையத்திலிருந்து அகற்ற ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப், டிக்டோக் போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவிடப்படலாம்.
'மோசடிகளை முறியடிக்க புதிய சட்டங்களைப் புதுப்பிக்கவும்'
மோசடிக்காரர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரையும் முறியடிக்க கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்துக்கு எதிரான புதிய சட்டங்களையும் அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் என்று பாலோ அல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் ஆசிய பிசிபிக், ஜப்பான் பிரிவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி திரு இயன் லிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊழல், போதைப்பொருள் கடத்தல், மற்ற வகை மிகக் கடுமையான குற்றங்கள், கணினியைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான மசோதாவில் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
புதிய சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவற்றையும் முறியடிக்கும் வழியை மோசடிக்காரர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று திரு லிம் கூறினார்.
எனவே, இப்பிரிச்சினையை எதிர்கொள்ள புதிய சட்டங்களும் அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திரு லிம் வலியுறுத்தினார்.

