அனுஷா செல்வமணி
வைசாகி மேளா சீக்கியர்களுக்கிடையே கலாசார ரீதியாகவும் சமய ரீதியாகவும் ஒரு குறிப்பிடத்தக்க பண்டிகையாக போற்றப்படுகிறது. தமிழர்கள் தைத் திருநாளைக் கொண்டாடுவது போல சீக்கியர்களுக்கு அதே சிறப்பு இந்த அறுவடை திருநாள் கலாசார வகையில் அளிக்கிறது.
அவ்வாறு, ஒருங்கிணைந்த சீக்கிய சமுதாயமாக அவர்களுக்குள் ஒற்றுமையைப் பறைசாற்றும் வண்ணம் அனுசரிக்கப்படும் இந்தப் பண்டிகை, கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சூழலில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் வாழும் சீக்கிய சமுதாயத்தினரால் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூர் கல்சா சங்கம் 30க்கும் மேற்பட்ட சீக்கிய நிறுவனங்களுடனும் இதர நிறுவனங்களுடனும் கைகோர்த்து நேற்றும் நேற்று முன்தினமும் சங்கத்தின் வளாகத்தில் நிகழ்ச்சிகளுக்கு நாள் முழுக்க ஏற்பாடு செய்திருந்தது.
கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்த்து வெற்றிகரமாகப் போராடிய அனைவரையும் பிரதிபலிக்கும் விதத்தில் கொண்டாட்டம் 'வலுவாக ஒன்றுபட்டு முன்னோக்கிச் செல்வோம்' எனும் கருப்பொருளில் இடம்பெற்றது.
1961லிருந்து சிங்கப்பூர் கல்சா சங்கத்தில் இடம்பெற்று வரும் இந்தக் கொண்டாட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக கொள்ளை நோய் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தேறியது.
இவ்வாண்டு பெரியளவில் இரண்டு நாள்களுக்கு நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வுகள் சீக்கியர்களை மட்டுமின்றி பிற இனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3,000 பேரை ஈர்த்தது.
பண்டிகைக் கொண்டாட்டமாக மட்டுமின்றி கொள்ளைநோயின்போது முக்கிய பங்காற்றிய 50க்கும் மேற்பட்ட சீக்கியர்களுக்கும் பஞ்சாபி மொழியைத் தேசிய அளவில் தங்கள் தாய்மொழியாக எடுத்து தேர்வுகளில் சென்றாண்டு சிறப்புத் தேர்ச்சி கண்ட சீக்கிய மாணவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கொண்டாட்டத்தின் வேறோர் அம்சமாக சிறுவர்களுக்கான விளையாட்டுகள், போட்டிகள், பெண்களுக்கும் முதியவர்களுக்குமான நடவடிக்கைகள், பஞ்சாபி கவிதைப் போட்டி, கபடி போட்டி, பண்பாட்டு நிகழ்ச்சிகள், பாங்க்ரா ஆடல் பாடல் ஆகியவை இரண்டு நாள்களுக்கு நடைபெற்றன.
சீக்கிய பாரம்பரியத்தைத் தழுவும் வகையில் பாரம்பரியப் பொருள்கள் விற்கப்படும் சாவடிகள் கொண்டாட்டத்திற்கு மேலும் மெருகூட்டின.
வெளிநாட்டு ஊழியர்களை உள்ளடக்கும் விதமாகவும் நேற்று வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்திலிருந்து சீக்கிய வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் வந்திருந்தனர்.
முதல் நாள் கொண்டாட்டத்தில் கலாசார, சமூக, இளையர் அமைச்சுக்கும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கும் மூத்த நாடாளுமன்ற செயலாளரான எரிக் சுவா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
"பன்முகத்தன்மை வளர்ந்து
வரும் சமுதாயத்தில் வாழும் சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு பிற இன வழக்கங்களை அரவணைத்து ஒன்றுபட்ட சமூகமாக நிற்க வேண்டும்," என்று திரு சுவா குறிப்பிட்டார்.

